விருதுநகரில் வீட்டின் பூட்டை உடைத்து 31 சவரன் நகை மற்றும் 44 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை சூலக்கரை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மார்டன் நகரைச் சேர்ந்தவர் மீனாட்சி. இவரது கணவர் மனோகரன் கனடா நாட்டில் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக உள்ளார். இந்நிலையில், மீனாட்சி மற்றும் அவரது உறவினர்களான லதா, சரஸ்வதி ஆகியோருடன் நேற்று அதிகாலை 3 மணியளவில் வீட்டை பூட்டி விட்டு திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்றுள்ளனர்.
இதையடுத்து நேற்றிரவு வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு மீனாட்சி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து விருதுநகர் சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து அங்க வந்த சூலக்கரை போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 31 சவரன் தங்க நகை மற்றும் 44 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த சூலக்கரை போலீசார், கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.