தமிழ்நாடு

விருதுநகர் கோவில் பிரச்னை: மறியலில் ஈடுபட முயன்ற ஒரு தரப்பினர் கைது – போலீசார் குவிப்பு

webteam

அருப்புக்கோட்டை அருகே பத்ரகாளியம்மன் கோவில் பிரச்னை காரணமாக மீண்டும் மறியலில் ஈடுபட முயன்ற ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலவனத்தம் கிராமத்தில் பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு இருதரப்பைச் சேர்ந்தவர்கள் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த பிரச்னை காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக கோவில் மூடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து நேற்று அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் கல்யாண குமார் தலைமையில் இருதரப்பினர் இடையே சமாதான கூட்டம் நடைபெற்றது. ஆனால் அதில் முடிவு எட்டப்படாததால் ஒரு தரப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்றிரவு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், போலீசார் விரைந்து வந்து அவர்களை சமாதானம் செய்து கலைந்து போகச் செய்தனர். இதையடுத்து அதே பிரச்னையில் மீண்டும் கிராமத்தில் ஒரு தரப்பைச் சேர்ந்த பொதுமக்கள் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர் ஆனால், அவர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.

பெண்கள் இளைஞர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். பாலவனத்தம் கிராமத்தில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.