செய்தியாளர்: K.கருப்பஞானியார்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தொம்பக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் ராஜ் (54). காவலராக பணிபுரிந்து வந்த இவர், தற்போது பதவி உயர்வு பெற்று தெற்கு காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் மது போதைதயில் இருந்த இவர், இரவு பணியிலிருந்த பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் அவர் பணி நேரத்தில் மது போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர், ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.