தமிழ்நாடு

விருதுநகர்: விதிமுறைகளை மீறியதாக 174 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து

kaleelrahman

விருதுநகர் மாவட்டத்தில் விதிமுறையை மீறிய 174 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 405 பட்டாசு ஆலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு உற்பத்தி ஆலைகளில் உச்சநீதிமன்றம் தனது 29.10.2021-ம் தேதியிட்ட தீர்ப்பில் தெரிவித்துள்ளவாறு, பேரியம் உப்பு கலந்து தயார் செய்யப்பட்ட பட்டாசுகள் மற்றும் சரவெடி போன்ற பட்டாசுகளை தயாரித்தல், சேமித்து வைத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு ஆய்வுசெய்ய குழு அமைக்கப்பட்டது.

மாவட்ட நிர்வாகத்தால் பட்டாசு உற்பத்தி ஆலைகளை தொடர் ஆய்வு செய்ய வருவாய்த்துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மற்றும் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் ஆகிய துறைகளை உள்ளடக்கிய ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இவை மாவட்டத்தில் இயங்கிவரும் பட்டாசு உற்பத்தி ஆலைகளில் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

தொடர் ஆய்வுகளில் சிறிய அளவிலான விதிமீறல்கள் கண்டறியப்பட்ட இனங்களில் தொடர்புடைய 405 பட்டாசு ஆலைகளுக்கு விளக்கம் கேட்கும் குறிப்பாணைகள் வழங்கப்பட்டும், அதிகளவிலான விதிமீறல்கள் கண்டறியப்பட்ட இனங்களில் தொடர்புடைய 174 பட்டாசு ஆலைகளின் உரிமத்தினை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தும் விதமாக ஆய்வுக் குழுக்களின் மூலமாக தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது விதிமுறைகளின்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.