விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர் நகர் அருகே சின்ன வாடியூர் பகுதியில் சதானந்தபுரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான தனியார் ( சத்திய பிரபா) நாக்பூர் பெசோ உரிமம் பெற்ற பட்டாசு ஆலையில் மருந்து செலுத்தும் போது வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 5-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெடி விபத்தில் இராமலட்சுமி (50) என்ற பெண் உயிரிழந்துள்ளார்.
30-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. ஐந்துக்கும்மேற்பட்ட அறைகள் முழுவதுமாக இடிந்து தரை மட்டம் அடைந்தது.
இந்த வெடி விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டாசு ஆலையின் போர் மேன் செல்வக்குமார், பட்டாசு ஆலையின் உரிமையாளர் மோகன்ராஜ் ஆகியோர் மீது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆர்.ஆர்.நகர் சத்தியபிரபா பட்டாசு ஆலையில் 10 வருடங்களுக்கு முன்பும் ஒரு பட்டாசு ஆலை விபத்து நிகழ்ந்துள்ளது. அப்போது ஒருவர் உயிரிழந்தார்.
இது இரண்டாவது விபத்து. பட்டாசு ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாக விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் புதிய தலைமுறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.