விருதுநகர் மாவட்டம் கோட்டைபட்டியில் நாயை அடித்துக் கொன்ற வழக்கில் தந்தை மற்றும் 2 மகன்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
கோட்டைபட்டி கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி மற்றும் நாகராஜ் இருவரும் தங்கள் வீட்டில் நாயை வளர்ந்து வந்தனர். இந்நிலையில், கடந்த 20 ஆம் தேதி சண்டையிட்டுக் கொண்ட இருவரது நாயையும் விலக்கி இழுத்துச் செல்ல முயன்ற நாகராஜை முனியசாமியின் நாய் கடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ் மற்றும் அவரது மகன்கள் மரத்தடி மற்றும் கற்களைக் கொண்டு தாக்கியதில் முனியசாமியின் நாய் உயிரிழந்ததாக தெரிகிறது.
இதையடுத்து தமது நாயை அடித்துக் கொன்ற நாகராஜின் மீது முனியசாமி காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், காவல் துறையினர் எழுதி வாங்கி விட்டு அனுப்பியதாக தெரிகிறது. இதில், சமாதானம் அடையாத முனியசாமி விலங்கின பாதுகாப்பு அமைப்பில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் நாயைக் கொன்ற நாகராஜ் மற்றும் அவரது மகன்கள் இருவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.