செய்தியாளர்: A.மணிகண்டன்
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூரைச் சேர்ந்தவர் குருலட்சுமி (32) இவருக்கு முகத்தாடையில் மூட்டு இணைத்து வாயை திறக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த 32 ஆண்டுகளாக நாக்கை வெளியே நீட்டமுடியாமல் முன்பக்கத்தில் உள்ள ஒரு பல்லை மருத்துவர்கள் உதவியோடு உடைத்து அதன் வழியே உணவை திரவமாக உட்கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முகத்தாடை அறுவை சிகிச்சை செய்ய கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு மருத்துவக் கல்லூரி டீன், ஜெயசிங் தலைமையில் முக அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் மயக்கவியல் நிபுணர்கள் குழு அப்பெண்ணின் வாயை திறக்க உதவியாக இருக்கும் இணைந்திருந்த மூட்டுவை மீண்டும் செயல்படவைத்து சாதனை படைத்துள்ளனர்.
தற்போது அப்பெண்ணால் வாயை திறந்து நாக்கை வெளியே நீட்ட முடிகிறது. மேலும் திட உணவுகளையும் உண்ண முடிவாக தெரிவிக்கிறார். இவ்வகை அறுவை சிகிச்சை இதுவரை சென்னை அரசு மருத்துவமனைக்கு பிறகு இங்கு தான் நடைபெற்றுள்ளது. மேலும் இவ்வகை சிகிக்கைக்கு தனியாரில் ரூ.12 லட்சம் வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.