பிரேமலதா விஜயகாந்த் எக்ஸ் தளம்
தமிழ்நாடு

நட்சத்திர தொகுதி | விஜயகாந்தைச் சட்டசபைக்கு அனுப்பிய விருத்தாசலம்.. மீண்டும் களமிறங்கும் பிரேமலதா!

நட்சத்திர தொகுதியில் நாம் இன்று காணவிருப்பது, தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் களம் காண உள்ள விருத்தாசலம் தொகுதி...

PT WEB

கடந்த 2021 தேர்தலில் அக்கட்சியின் பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த், மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டார். காங்கிரஸின் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று எம்எல்ஏவானார்.

தேமுதிக ஆரம்பிக்கப்பட்டு அந்தக் கட்சிக்கு முதல் வெற்றியையும், அங்கீகாரத்தையும் கொடுத்த தொகுதி என்றால் அது கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் தொகுதிதான். 2006இல் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தை சட்டமன்றத்திற்கு அனுப்பிய தொகுதி விருத்தாசலம். இந்த தொகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு போட்டியிட்டு, தோல்விகண்ட பிரேமலதா விஜயகாந்த், இந்த முறையும் விருத்தாசலத்திலேயே களம்காண்கிறார். 1952ஆம் ஆண்டிலேயே உருவான இந்த தொகுதியில், காங்கிரஸும், அதிமுகவும் தலா 3 முறை வெற்றி பெற்றுள்ளன. திமுக மற்றும் தேமுதிக தலா 2 முறை வென்ற தொகுதி விருத்தாசலம். இந்த தொகுதியில் 4 முறை தேர்தலைச் சந்தித்த தேமுதிக, 2 முறை வெற்றி பெற்றுள்ளது. 2006இல் விஜயகாந்தின் வெற்றியைத் தொடர்ந்து, 2011 தேர்தலில் தேமுதிகவின் முத்துக்குமாருக்கும் வெற்றியைத் தந்தது விருத்தாசலம். ஆனால், 2016இல் தேமுதிகவிடம் இருந்து தொகுதி கைநழுவியது. அந்த தேர்தலில் அதிமுகவிடம் தேமுதிகவின் முத்துக்குமார் தோல்வியை தழுவினார்.

விஜயகாந்த், பிரேமலதா

கடந்த 2021 தேர்தலில் அக்கட்சியின் பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த், மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டார். காங்கிரஸின் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று எம்எல்ஏவானார். மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையின சமூகத்தினரும், செராமிக் தொழிலாளர்களும் நிறைந்த தொகுதி இது. கிட்டத்தட்ட 2 லட்சத்து 37 ஆயிரம் வாக்காளர்கள் இந்தத் தொகுதியில் உள்ளனர். விருத்தாசலத்தைத் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், மகளிர் மற்றும் வேளாண் கல்லூரிகள் அமைக்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கையாக உள்ளது. விருத்தாலசத்தில் இந்த முறை தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்தை எதிர்த்து பாமக வேட்பாளர் தமிழரசி களமிறங்கியுள்ளார். நாதக வேட்பாளர் ஆனந்தியுடன், தவெக சார்பில் விஜய் என்பவரும் போட்டியிடுவதால் விருத்தாசலம் களம் விறுவிறுப்படைந்துள்ளது.