சென்னை மெரினா கடற்கரையில் தடையை மீறி கடலில் இறங்கி குளித்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் இரண்டு பேரின் உடல்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த மாணவர் சக்திவேல், நண்பர்களுடன் நேற்றிரவு மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார். கடலில் இறங்கி குளித்தபோது சக்திவேல் அலைகளால் இழுத்துச்செல்லப்பட்டதாக உடன் இருந்த நண்பர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். இவர்கள் தந்த தகவலின்பேரில் அண்ணாசதுக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சக்திவேலின் உடலை தேடிவருகிறார்கள். இதுவரை சக்திவேலின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதேபோல,. கோவிலம்பாக்கம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த முருகன், அவரது உறவினர் சுதாகர் ஆகியோர் குடும்பத்துடன் நேற்று இரவு மெரினா கடற்கரை வந்திருந்தனர். உறவினர்கள் கடற்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தநிலையில், இவர்களின் மகன்களான தனுஷ்குமார், ஆகாஷ் ஆகியோர் கடலில் இறங்கி குளித்தனர். அப்போது ராட்சத அலையில் சிறுவர்கள் இருவரும் அடித்துச்செல்லப்பட்டனர். இவர்களில் ஆகாஷின் உடல் கரை ஒதுங்கியது. தனுஷ்குமாரின் உடல் கண்டுபிடிக்கப்படவில்லை. ஒரே நேரத்தில் இரண்டு சிறுவர்களை இழந்த துயரத்தில் அக்குடும்பமும் வேதனையில் தவிக்கிறது. சென்னையில் நேற்று மட்டுமே மெரினா கடலில் மூழ்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.