தலைக்கவசம் உயிர்க்கவசம் என்பதை வலியுறுத்தும் வகையில் தலைகவசம் அணிந்து வாகனத்தில் செல்வது போன்ற விநாயகர் சிலை அனைவரையும் ஈர்த்து வருகிறது.
இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், சிலைகள் விற்பனை செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தலைகவசத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கோவை குனியமுத்தூரை சேர்ந்த தங்க நகைத்தொழிலாளி ராஜா, விநாயகரும் அவரது வாகனமான எலியும் தலைகவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தில் செல்வது போன்று நகரும் வகையில் சிலையை செய்துள்ளார்.
இச்சிலையில் எலியின் கையில் 'காக்க காக்க தலையை காக்க', 'நோக்க நோக்க சாலை விதிமுறைகளை நோக்க' என்ற பதாகையுடன் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மெழுகு மற்றும் களிமண்ணால் வடிவமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. வீட்டில் இருந்து வெளியே செல்லும்போது விநாயகரை வணங்கி செல்வோம், ஆனால் தலைகவசம் அணிய மறந்து விடக்கூடாது என்பதற்காக இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே செய்ததாக தெரிவிக்கும் ராஜா, களிமண்ணால் இச்சிலை செய்ய மூன்று நாட்கள் ஆனதாக கூறினார்.
இதற்கு முன் தங்கத்தால் மினி கிரிக்கெட் உலக கோப்பை, ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக காளைகளை அவர் வடிவமைத்துள்ளார். மேலும் மாம்பழத்தில் கருணாநிதி, எம்.ஜி.ஆர், மூங்கிலில் தேசத்தலைவர்களை வடிவமத்துள்ளார்.