விநாயகர் சதுர்த்தியையொட்டி விழுப்புரம் அருகேயுள்ள கிராமங்களில் விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 13-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் அரசூர், ஜானகிபுரம், பிடாகம் உள்பட பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி முடிவடைந்து, வண்ணம் தீட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விழுப்புரம் அருகேயுள்ள அய்யங்கோயில்பட்டு கிராமத்தில் மாவுக் கலவையில் விநாயகர் சிலைகள் செய்யப்படுகின்றன.
3 அடி முதல் 15 அடி உயரமுள்ள விநாயகர் சிலைகள் வரை இங்கு செய்யப்படுகின்றன. வழக்கமாக செய்யப்படும் பிரம்மாண்ட விநாயகர் சிலைகளுடன், நடன விநாயகர், சிவன்-பார்வதியுடன் விநாயகர், ரதத்தில் செல்லும் விநாயகர், ஆஞ்சநேயர் சுமந்து செல்லும் விநாயகர், பாகுபலி விநாயகர், ஜல்லிக் கட்டு விநாயகர், சிங்கத்தின் மீது அமர்ந்து செல்லும் விநாயகர், 3 தலைகள் கொண்ட விநாயகர், முருகர், கிருஷ்ணருடன் விநாயகர் போன்ற வடிவங்களில் இங்கு சிலைகள் தயார் செய்யப்படுகின்றன.
15 அடி விநாயகர் சிலை செய்வதற்கு 20-க்கும் மேற்பட்ட தனித் தனி பாகங்களாக உருவங்களை தயார் செய்கின்றனர். பின்னர், அவற்றை ஒன்றிணைத்து முழுமையாக்குகின்றனர். இங்கு களிமண், மரவள்ளிக்கிழங்கு மாவு, அட்டைத் தூள் போன்ற கலவைகளால் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. தண்ணீரில் கரையக்கூடிய வாட்டர் கலரை வண்ணம் தீட்ட பயன்படுத்துகின்றனர். மேலும் இங்கு தயார் செய்யப்படும் விநாயகர் சிலைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மட்டுமன்றி ஆந்திரம், கர்நாடகம், கேரளம் போன்ற பிற மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. ரூ.4 ஆயிரத்திலிருந்து ரூ.21 ஆயிரம் வரை பல்வேறு வடிவங்களுக்கேற்ப சிலைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதுகுறித்து சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கர்ணன் “ஜனவரி மாதத்திலிருந்தே சிலை செய்யும் பணியைத் தொடங்கிவிடுவோம், இந்த ஆண்டு மட்டும் 500 சிலைகள் வரை செய்துள்ளோம். தற்போது சிலைகளுக்கு வண்ணம் தீட்டும் பணி தொடங்கி நடைபெறுகிறது. அதன்பிறகு, சிலைகள் விற்பனை செய்யப்படும். சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையில் தயாரிக்கப்படும் இந்த சிலைகள் நீரில் போட்ட அடுத்த விநாடி முதல் கரையத் தொடங்கும். இத்தொழிலில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வருவாய் கிடைப்பதால், வட்டிக்குக் கடன் வாங்கி தொழில் செய்கிறோம். அரசு, வங்கிகள் மூலம் கடன் வழங்கி உதவி செய்ய வேண்டும்” என்கிறார்.