Vinayagar Chaturthi 2025 representational image | freepik
தமிழ்நாடு

Vinayagar Chaturthi 2025 | விநாயகர் சிலை வழிபாடு.. கவனிக்க வேண்டியவைகள் என்னென்ன?

தீயணைப்புத்துறை, மின்வாரியம், ஆகியவற்றிடமிருந்து தடையில்லா சான்றுகள் பெற்றிருக்க வேண்டும்.

Vaijayanthi S

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகளை வைத்து வழிபாடு செய்ய காவல் துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளனர். அது என்னென்ன? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

விநாயகர் சதுர்த்தி வருடாவருடம் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வருகிற 27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். இந்த நாளில் மக்கள் வீடுகளிலும் பொது இடங்களி்லும் விநாயகர் சிலைகளை வாங்கி வைத்து வழிபாடு செய்வார்கள்.. அப்படி வழிபாடு செய்யும்போது எப்படி செய்ய வேண்டும்? எப்போது விநாயகரை கரைக்க வேண்டும்? விநாயகர் சிலை எத்தனை அடியில் இருக்க வேண்டும் என பலவிதமான விதிமுறைகளை தமிழக அரசும் காவல்துறையும் சேர்ந்து வெளியிடுவது வழக்கம்..

விநாயகர் சிலை

அதேபோல இந்த வருடமும், சென்னையில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட காவல்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல்துறை சார்பில், விநாயகர் சிலைகளை வைத்து வழிபடும் பல்வேறு அமைப்பினருடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய போலீசார் தரப்பில் வழங்கப்பட்ட அறிவுரைகள் இதோ..

1. அதன்படி, விநாயகர் சிலைகள் நிறுவுமிடத்தின் நில உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத்துறை அல்லது அரசுத் துறையிடமிருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்..

2. தீயணைப்புத்துறை, மின்வாரியம், ஆகியவற்றிடமிருந்து தடையில்லா சான்றுகள் பெற்றிருக்க வேண்டும்.

3. நிறுவப்படும் சிலையின் உயரமானது அடித்தளத்திலிருந்து மேல் வரை 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது.

4. பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் சிலைகள் நிறுவப்படுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

5. மேலும், விதிகளை பின்பற்றி, போலீசார் அனுமதிக்கும் நாட்களில், விநாயகர் சிலைகளை அமைதியான முறையில் ஊர்வலமாக எடுத்துச் சென்று, நீரில் கரைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

6. விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடங்கள் , ஊர்வல பாதைகள் மற்றும் கரைப்பிடங்களில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.