தமிழ்நாடு

புதியதலைமுறை செய்தி எதிரொலி: இருளர் மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்ட ஆட்சியர்

நிவேதா ஜெகராஜா

புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக நீண்ட காலமாக அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வரும் பழங்குடி, இருளர் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட ஆட்சியர் மோகன். ஆய்வு மேற்கொண்டபின் அவர் பேசுகையில், ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதிக்குள் அப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றித்தர அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறினார்.

விழுப்புரம் மாவட்டம் பெரியதச்சூரை அடுத்துள்ளது, எண்ணாயிரம் என்கிற கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 12 இருளர் குடும்பங்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றனர். ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஏரிக்கரை ஓரத்தில் இவர்களுக்கு அரசு மனைப்பட்டா சில ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்டது. மனை பட்டா வழங்கி ஆண்டுகளாகியும்கூட, அவர்களின் எந்த அடிப்படைத் தேவைகளும் இன்னமும் பூர்த்தி செய்யப்படாமலேயே இருந்துள்ளது. குறிப்பாக குடிநீர் வசதியின்மை; மின்சாரம் இல்லாமை; பொதுவெளியில் கழிவுநீர் வெளியேற்றம் போன்ற பிரச்னைகள் இருப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்து வந்தனர்.

இக்கட்டான சூழ்நிலையில் அந்த 12 குடும்பங்களும் வாழ்ந்து வருகின்றன என்றும், இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வதற்கு யாரும் முன் வரவில்லை என்றும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக புதிய தலைமுறை வழியாக அவர்கள் தங்களின் வேதனையை செய்தியாக பதிவுசெய்தனர்.

அந்த செய்தி வெளியானதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் மோகன் இன்று எண்ணாயிரம் பகுதிக்கு நேரடியாக சென்று பழங்குடி அந்த 12 குடும்பங்களை சேர்ந்த இருளர் இன மக்களை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, பின்னர் அவர்களின் தேவையை சரிசெய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் இந்த மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் என்று கூறினார்.

ஜோதி நரசிம்மன்