விழுப்புரம் மாவட்டம் பொம்மையார் பாளையத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட வீடுகள் கடல் சீற்றம் காரணமாக கடும் சேதமடைந்தன.
கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் விழுப்புரத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் பொம்மையார் பாளையம் கிராமத்தில் கடல் சீற்றம் ஏற்பட்டது. அப்போது சீறிவந்த கடல் நீரால் ஒருசில வீடுகள் முற்றிலுமாக இடிந்துள்ளன. இதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
மேலும் தங்கள் பகுதியில் கடல் சீற்றம் அதிகரித்துள்ளதால் குடியிருப்பு பகுதிகளிலுள்ள பல வீடுகள் பாதிக்கும் அபாயம் இருப்பதாகவும் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். அத்துடன் கடல் சீற்றத்தால் வீடுகள் சேதமடைவது அப்பகுதியில் அடிக்கடி நடைபெற்று வருவதாகவும், தூண்டில் வளைவு அமைத்து தங்கள் கிராமத்தை பாதுகாக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். வீடுகள் முற்றிலும் இடிந்ததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சிலர் வேதனை தெரிவித்துள்ளனர்.