கொரோனா காலத்தில், கூட்ட நெரிசலில் படியில் பயணம் செய்யும் நிலை பெரும்பாலான மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. சூழலை சமாளிக்க, கூடுதல் பேருந்து இயக்க மாணவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதலின்படி, 9-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த செப்.1ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில், பள்ளிக்கு பேருந்து வழியாக வரும் மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதிகள் தமிழக அரசு மூலமாக செய்யப்பட்டு இருந்தது. அந்த வகையில் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் இருந்து பிடாகம், பேரங்கியூர், அரசூர், திருவெண்ணைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பள்ளிக்கு செல்வதற்கு நிறைய மாணவர்கள் பேருந்தில் வருகின்றனர்.
ஆனால் இப்பகுதியில் போதிய பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தினால் மாணவர்கள் பலரும் கூட்டமாக ஒரே பேருந்தில் பேருந்தில் பயணம் செய்யக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் படியில் பயணம் செய்யும் காட்சிகளையும் காண முடிந்தது. கொரோனா நேரத்தில், சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருப்பதே தவறென சொல்லப்படும் நிலையில், மாணவர்கள் இப்படி கூட்டம் கூட்டமாக, அதுவும் படியில் தொங்கியபடி பயணம் செய்த காட்சி பெற்றோரையும் பொதுமக்களும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
தொடர்புடைய செய்தி: பேருந்தில் பயணிகளுக்கு இடையூறு: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கைது செய்து விடுவிப்பு
மாவட்ட நிர்வாகம் இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு புதிய பேருந்து வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது மாணவர்களின் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
- ஜோதி நரசிம்மன்