தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டும் மாற்றுத்திறனாளிகள்

webteam
தமிழகத்திலேயே அதிக அளவாக விழுப்புரம் மாவட்டத்தில் 28 மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் சூழலில், இத்தேர்தலில் மாற்றுத்திறனாளிகளும் போட்டியிட களமிறங்கியுள்ளனர். அதன்படி, 9 மாவட்டங்களில் மொத்தம் 40 மாற்றுத்திறனாளிகள் போட்டியிடுகின்றனர். இவர்களில் அதிக அளவாக விழுப்புரம் மாவட்டத்தில் 28 பேர் போட்டியிடுகின்றனர்.
3 ஊராட்சி தலைவர்கள் பதவிக்கும், 1 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும், மீதமுள்ளவர்கள் கிராம ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர். விழுப்புரம் மாவட்டம் உலகலாம்பூண்டி என்கிற ஊராட்சியில் போட்டியிடும் தமிழரசி என்கிற மாற்றுதிறனாளி பெண், வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். மாற்றுத்திறனாளி வேட்பாளர்களுக்கு ஆதரவாக சக மாற்றுத்திறனாளிகளும் மூன்று சக்கர வாகனங்களில் சென்று வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தது கவனத்தை ஈர்த்தது.
உள்ளாட்சித் தேர்தலில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஜோதி நரசிம்மன்