தமிழ்நாடு

மாற்றுத்திறனாளியின் 10ஆண்டு கால கோரிக்கையை 10 நிமிடத்தில் நிறைவேற்றிய விழுப்புரம் ஆட்சியர்

நிவேதா ஜெகராஜா

விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளியின் 10 ஆண்டுக் கோரிக்கையை, 10 நிமிடத்தில் நிறைவேற்றியுள்ளார் அம்மாவட்ட ஆட்சியர் மோகன்.

விழுப்புரம் மாவட்டம் நெற்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி முனியப்பன் (வயது 43). இவர், அரசு தனக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சைக்கிள் வாகனம் தரவேண்டும் என்ற கோரிக்கையுடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று மனு அளிக்க வந்திருந்தார்.

இதற்காக வந்தபோது, ஆட்சியர் வளாகம் நுழைவாயிலுக்கு முன்பாக தனது இரண்டு கைகளையும் கொண்டு தவழ்ந்தபடி வந்துள்ளார். அப்போது அந்த வழியாக காரில் சென்ற மாவட்ட ஆட்சியர் மோகன், முனியப்பன் தவழ்ந்து வருவதைப் பார்த்துவிட்டு காரிலிருந்து இறங்கிவந்து அவரிடம் அவரின் தேவைகள் குறித்து விசாரித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து முனியப்பன் தனது மனுவை ஆட்சியரிடமே அளித்திருக்கிறார். அந்த மனுவை வாங்கிப் பார்த்த மாவட்ட ஆட்சியர் மோகன், உடனடியாக மாற்றுத்திறனாளி அலுவலருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதனைத்தொடர்ந்து அதே இடத்தில் அடுத்த பத்து நிமிடத்தில் முனியப்பனுக்கு ரூ. 8,200 மதிப்புள்ள தமிழக அரசால் வழங்கப்படும் மூன்று சக்கர சைக்கிளை ஆட்சியர் வழங்கி நெகிழச்சியை எற்படுத்தியுள்ளார்.

10 நிமிடத்தில் தனக்கு சைக்கிள் கிடைத்தது குறித்து மாற்றுத்திறனாளி முனியப்பன் கூறுகையில், “நான் சிறு வயதிலேயே இளம்பிள்ளை நோயால் பாதிக்கப்பட்டேன். அதனால் இரண்டு கால்களையும் இழந்து தற்போது வீட்டிலேயே கூலி வேலை செய்து வருகிறேன். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சைக்கிள் வேண்டி மனு அளித்தோம். தொடர்ந்து பலமுறை மனு அளித்தும் எனக்கு சைக்கிள் கிடைக்கவில்லை. தற்போது மீண்டும் சைக்கிள் வேண்டி மனு அளிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தேன்.

ஆனால் பெருந்திட்ட வளாகம் நுழைவாயிலின் முன்பாக என்னை பார்த்த மாவட்ட ஆட்சியர், அங்கேயே விசாரணை செய்து பத்து நிமிடத்திலேயே அங்கேயே எனக்கு சைக்கிள் வழங்கிவிட்டார். இது எனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகிழ்ச்சியாகவும் உள்ளது. இந்த நேரத்தில், தமிழக அரசுக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் நன்றி சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்” என்றார்.

மாற்றுத்திறனாளியின் 10 ஆண்டுக்கால கோரிக்கையை 10 நிமிடத்தில் நிறைவேற்றிய மாவட்ட ஆட்சியரையும், தமிழக அரசையும் பொதுமக்கள் பாராட்டினர்.

- ஜோதி நரசிம்மன்