தமிழ்நாடு

ரயில் படியில் அமர்ந்து பயணம் செய்த இரு இளைஞர்களுக்கு நேர்ந்த பரிதாபம்

ரயில் படியில் அமர்ந்து பயணம் செய்த இரு இளைஞர்களுக்கு நேர்ந்த பரிதாபம்

kaleelrahman

விழுப்புரம் அருகே பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் படியில் அமர்ந்து பயணம் செய்த இளைஞர்கள் இருவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னையில் இருந்து விழுப்புரம், திருச்சி வழியாக காரைக்குடி செல்லும் பல்லவன் அதிவிரைவு ரயில் நேற்று மாலை விழுப்புரத்தை அடுத்த சிந்தாமணி ரயில்வே கேட் அருகே வந்தது. அப்போது ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியின் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த 2 பேர் திடீரென ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளனர். இதில், அவர்கள் இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து அங்கிருந்த ரயில்வே கேட் கீப்பர், இதுபற்றி விழுப்புரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார், விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்களில் ஒருவர் திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்த அருண் (22) என்பதும், மற்றொருவருக்கு 30 வயது இருக்கும் என்றும் தெரியவந்தது. ஆனால் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. அவர்கள் இருவரும் சென்னையில் இருந்து திருச்சிக்கு பயணம் செய்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து இருவரின் உடலையும் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.