விழுப்புரத்தில் அமைச்சரை வரவேற்க சாலையோரத்தில் கட்சிக்கொடி நடப்பட்டது போது மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் மாம்பழம்பட்டு சாலையில் திருமண நிகழ்ச்சிக்காக சென்ற அமைச்சர் க.பொன்முடியை வரவேற்க சாலையோரத்தில் கட்சிக் கொடிகள் நடப்பட்டன. கட்சி கொடிகளை நடும் தொழில் செய்துவரும், ரஹீம் லே-அவுட் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், ஏகாம்பரம் என்பவரது மகன் தினேஷை (13) உதவிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுவன் தினேஷ் கொடி நடும்போது, மேலே சென்ற உயர் மின்அழுத்த கம்பியில் கொடிக்கம்பு உரசியதில் மின்சாரம் தாக்கி சிறுவன் தூக்கி வீசப்பட்டான். படுகாயமடைந்த சிறுவன் தினேஷ் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
இதையடுத்து சிறுவனின் தாய் லட்சுமி, விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சந்தேக மரணம் என காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், ஒப்பந்ததாரர் வெங்கடேசனை போலீசார் கைது செய்துள்ளனர்.