ஒருவர் சடலமாக மீட்பு pt desk
தமிழ்நாடு

விழுப்புரம்: பக்கிங்காம் கால்வாயில் தவறி விழுந்த 3 சகோதரர்கள் - ஒருவர் சடலமாக மீட்பு

மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் தூண்டிலில் மீன்பிடித்த போது தவறி விழுந்து மாயமான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்களில் ஒருவரை தீயணைப்புத் துறையினர் சடலமாக மீட்டுள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: காமராஜ்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சந்தை தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன்களான லோகேஷ் (24) மற்றும் இரட்டை சகோதர்களான விக்ரம் (23), சூர்யா (23) ஆகிய மூன்று பேரும் நேற்று மாலை கடல் முகத்துவாரப் பகுதியான பக்கிங்காம் கால்வாயில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மூத்த சகோதரர் லோகேஷ், பக்கிங்காம் கால்வாயில் தவறி விழுந்துள்ளார்.

பக்கிங்காம் கால்வாய்

இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற இரு சகோதரர்களும் அண்ணனை காப்பாற்ற பக்கிங்காம் கால்வாய்க்குள் அடுத்தடுத்து குதித்துள்ளனர். இதில், சகோதரர்கள் மூவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். தகவலறிந்த அங்கு வந்த மரக்காணம் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் பக்கிங்காம் கால்வாயில் தவறி விழுந்து மாயமான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பலமணி நேர தேடுதலுக்குப் பிறகு மூன்று பேரில் லோகேஷ் என்பவர் உடல் மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இரண்டு பேரின் உடல்களை தேடும் பணியில் தீயனைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.