விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறி வெளியே சுற்றித்திரிந்தவர்களுக்கு அம்மாவட்ட போக்குவரத்து போலீசார் கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு ஊரடங்கு, தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் நிலைமையின் தீவிரம் அறியாமல், இன்னும் பல பகுதிகளில் மக்கள் வெளியே சுற்றித்திரிகின்றனர். அவர்களை தண்டிக்கும் வகையில் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்திலும் ஊரடங்கு விதிகளை மீறி பலர் வெளியே தொடர்ந்து சுற்றி வந்ததால் அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் இன்று விழுப்புரம் நான்குமுனைச் சந்திப்பில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், தடுப்பூசி செலுத்த போகிறேன், பரிசோதனை செய்ய போகிறேன் என்று கூறிய நபர்களை தடுத்து நிறுத்தி, அவர்களுக்கு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ஏற்படுத்தப்பட்ட முகாமில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவும், பரிசோதனை மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்தனர். அதன்படி இன்று ஊரடங்கு விதிகளை மீறி வெளியே வந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.