தமிழ்நாடு

‘தனி வருவாய் கிராமமாக அறிவிக்காவிட்டால்...’ - எச்சரிக்கை போஸ்டர் ஒட்டிய கிராம மக்கள்

‘தனி வருவாய் கிராமமாக அறிவிக்காவிட்டால்...’ - எச்சரிக்கை போஸ்டர் ஒட்டிய கிராம மக்கள்

நிவேதா ஜெகராஜா

சின்னசேலம் அருகே நாககுப்பம் கிராமத்தை வருவாய் கிராமமாக அறிவிக்கக்கோரி அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒருவேளை அறிவிக்காவிட்டால், தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளார்கள் அவர்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுகாவுக்குட்பட்ட நாககுப்பம் கிராமத்தில் 3,000-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள விவசாயிகளுக்கு அருகில் உள்ள பாண்டியன்குப்பம் வருவாய் கிராமத்திலும், மரவாநத்தம் வருவாய் கிராமத்திலும் எல்லையை ஓட்டினாற்போல் விவசாய நிலங்கள் உள்ளன.

மேலும் இந்த 2 கிராமங்களிலும், நாககுப்பம் கிராம விவசாய நிலங்கள் 1,000 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. அதேபோல் மக்கள் தொகையிலும், பாண்டின்குப்பம் கிராமத்தை விட, நாககுப்பம் கிராமத்தில் மக்கள் தொகை அதிகம்.

அப்படியான சூழலில் நாககுப்பம் கிராம மக்கள் பட்டா, சிட்டா போன்ற சான்றிதழ்களுக்கு 3 கி.மீ., தொலைவில் உள்ள பாண்டியன்குப்பம் மற்றும் மரவாநத்தம் கிராம நிர்வாக அலுவலகத்திற்குச் செல்லும்படியான நிலை நிலவிவருகிறது. இதனால் மிகுந்த சிரமம் ஏற்படுவதால், நாககுப்பம் கிராமத்தை தனி வருவாய் கிராமமாக அறிவிக்கக் வேண்டும் என்றும், இல்லையெனில் வரும் அக்டோபர் 9ம் தேதி நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்பு செய்யப்போவதாகவும் ஊர் பொதுமக்கள் சார்பில் கிராமத்தில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஊர்மக்கள் சார்பில் துண்டுபிரசுரங்களும் விநியோக்கப்பட்டு வருகிறது.