ஊர் பெயரை மாற்ற கோரிக்கை pt
தமிழ்நாடு

மதுரை | ஊர் பெயரை வைத்தே சாதிய பாகுபாடு.. வேதனையோடு கோரிக்கை வைக்கும் கிராம மக்கள்!

பெயரில் என்ன இருக்கு ? என்பார்கள். ஆனால் பெயரில் தான் அனைத்தும் இருக்கிறது. பெயரைக் கொண்டு அனைத்தையும் அளந்துவிடும் சமூகம் இது. இதனால், தங்கள் ஊரின் பெயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் நிற்கிறார்கள் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராம மக்கள்.

PT WEB

மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் வடக்கம்பட்டியில், பட்டியலின வகுப்பினர் வசிக்கும் பகுதியை வடக்கம்பட்டி காலனி என்றும், மற்ற இரு பகுதிகளை தங்களாச்சேரி, சுவீப்பர் காலனி என்றும் அழைக்கின்றனர். சில இடங்களில் மேலத்தெரு, கீழத்தெரு எனப் பிரித்து காட்டுகின்றனர்.

இதேபோல் மேலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாந்தமங்கலம் ஊராட்சிக்கு உள்ளடக்கி 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் இடம், ’ஒத்தச்சேரி’ என்றழைக்கப்படுகிறது. சேரி என்பது சேர்ந்து வாழும் இடம் என்ற பொருளைக் கொண்டது என்றாலும், சமூக சூழலில், பட்டியலினத்தவர் வசிக்கும் பகுதியாக சேரி என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

இந்த அடையாளம் தங்களுக்கு மனவேதனையை உண்டாக்குவதாக கூறுகிறார்கள் இந்த பகுதியில் வசிப்பவர்கள்.

மாவட்ட ஆட்சியர் சொன்னது என்ன?

பெயர் மாற்றம் என்பது வெறும் வார்த்தை மாற்றமல்ல. அது அந்த சமூகத்தின் அடையாளத்தை மாற்றும் முயற்சி. பட்டியலினத்தவர் வசிக்கும் பகுதியை "காலனி" "குப்பம்" “சேரி” என அழைக்கப்படுவது ஒரு தனிமைப்படுத்தல், ஒடுக்குமுறை, சமூக மறுப்பு போன்றவற்றின் நிழலை ஏந்திக் கொண்டிருப்பதாக உணர்கின்றனர். இத்தகைய மனவேதனையிலிருந்து விடுபடவே அவர்கள் இந்த மாற்றத்தைக் கோருகிறார்கள்.

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை தொடர்பு கொண்டு கேட்டபொழுது அரசாங்க ஆவண பதிவேட்டில் மேற்கண்ட கிராமத்தின் பெயர் என்னவாக இருக்கிறது என்பது குறித்து விசாரிக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் பெயர் மாற்றம் செய்ய விருப்பப்பட்டால் மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக மனு கொடுத்தால் பெயர் மாற்றம் செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.