ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சிக்கல் கிராமத்தில் ஊருணியில் மக்கள் கிணற்றை அமைத்து அதனைப் பூட்டி வைத்து பயன்படுத்திவருகின்றனர்.
பருவமழை பொய்த்துபோனால் கோடை காலத்தில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடும். இந்த முறை தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால் தண்ணீருக்கான போராட்டம் பல இடங்களில் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் கிணற்றை பூட்டி வைத்துள்ளனர் ஒரு கிராமத்து மக்கள்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை அடுத்த சிக்கல் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள், தங்களின் குடிநீர் தேவைக்காக பாண்டியன் ஊருணியில் கிணறுகளை தோண்டி பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்களுக்கான கிணற்றை தனித்தனியே தோடி அவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.
அப்படி ஊருணியில் கிணற்றை தோண்டியவர்கள் அதற்கு முள்வேலி அமைத்து பூட்டி வைத்துள்ளனர். தேவைப்படும் போது பூட்டை திறந்து முள்வேலிக்குள் சென்று கிணற்றிலுள்ள நீரை பயன்படுத்துக் கொள்கிறனர். தண்ணீர் எடுத்து முடிந்ததும் அதனை மீண்டும் பூட்டுப்போட்டு பூட்டிவிட்டு செல்கின்றனர். கிணற்று நீரை வேறு யாரும் எடுத்து பயன்படுத்திக்கொள்ளாமல் இருக்கவே இவர்கள் இப்படி செய்து வருகிறார்கள்.
25 ஏக்கர் பரப்பிலான ஊருணியில் வசதியுள்ளவர்கள் மட்டும் பத்தாயிரம் ரூபாய் செலவு செய்து கிணறு தோண்டிக் கொள்ளகின்றனர். மற்றவர்களின் நிலையோ கவலைக்குரியதாக இருக்கிறது. பருவமழை பொய்த்து, ஊருணி வறண்டுவிட்டநிலையில், மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க, பாண்டியன் ஊருணியில் பெரிய அளவில் கிணறு தோண்டி அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று ஊர்மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.