தமிழ்நாடு

‘கெணத்தை காணோம்’ - வடிவேலு பாணியில் ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த கிராம மக்கள்

kaleelrahman

விழுப்புரம் அருகே காணாமல்போன பொது கிணற்றை கண்டுபிடித்து தருமாறு, மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

விழுப்புரத்தை அடுத்துள்ள கண்டம்பாக்கம் கிராமத்தில் சுமார் மூவாயிரம் பேர் வசித்து வருகின்றனர். இக்கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் பொதுக்கிணறு ஒன்று வெட்டப்பட்டது. இந்த கிணறு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை குடிநீர் கிணறாக பயன்பாட்டில் இருந்து வந்தது. 

இந்நிலையில், படிப்படியாக தண்ணீர் வற்றி அந்த கிணறு பயன்பாட்டில் இல்லாமல் போனது. இதனையடுத்து, அதன் அருகாமையில் ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டது. அதன்மூலம் அப்பகுதி மக்களுக்கு, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இதையடுத்து, அந்த இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து, மரக்கன்றுகளை நட்டு, தனது சொந்த பயன்பாட்டில் பராமரித்து வருகிறார். அதோடு அவர் தனது மனைவி பெயரில், அந்த இடத்திற்கு, முறைகேடாக பட்டாவும் வாங்கியுள்ளார்.

இந்த நிலையில் அந்த கிராமத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், தனிநபர் கட்டுப்பாட்டிலுள்ள பொது இடத்தின் ஆக்கிரமிப்பை அகற்றி, அந்த இடத்தில் மீண்டும் குடிநீர் கிணறு அல்லது ஆழ்துளை குழாய் அமைத்து, பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.