சேற்றை பூசிக்கொண்டு வலம் வந்த பக்தர்கள் pt desk
தமிழ்நாடு

விளாத்திகுளம் | பத்ரகாளியம்மன் கோயில் விநோத திருவிழா - சேற்றை பூசிக்கொண்டு வலம் வந்த பக்தர்கள்

விளாத்திகுளம் அருகே விநோத கோயில் திருவிழா - உடலில் சேற்றை பூசி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

PT WEB

செய்தியாளர்: மணிசங்கர்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சோழபுரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகும். இந்தக் கோயிலில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டுக்கான சித்திரைத் திருவிழா கடந்த 13,ஆம் தேதி தொடங்கியது.

இதையடுத்து அன்றைய தினம் 108 இளநீர் மற்றும் 210 பால்குடங்களுடன் பக்தர்கள் ஊர்வலம் வந்து 9 வகை அபிசேகங்களுடன் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து இந்தாண்டு 'சேற்றுத் திருவிழா' வழக்கமான உற்சாகத்துடன் இன்று கொண்டாடப்பட்டது.

இதில், ஆண்கள், சிறுவர்கள் தங்களது உடல் முழுவதும் சேற்றை பூசிக்கொண்டு, கைகளில் வேப்பிலையை ஏந்தியவாறு ஊரிலுள்ள பொது கண்மாயில் இருந்து தொடங்கி கிராமம் முழுவதும் சுற்றி இறுதியில் கோயிலை வந்தடைந்தனர். இதையடுத்து 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று இசை வாத்தியங்களுக்கு ஏற்ப ஆட்டம், பாட்டத்துடன் கையில் வேப்பிலையுடன் வந்து நேர்த்திக்கடனை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.