பனையூரில் நடந்த ஆயுதபூஜை நிகழ்வுகள் pt web
தமிழ்நாடு

விஜயின் பனையூர் அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டம்... கிளம்பிய அடுத்த சர்ச்சை!

கரூர் நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தின் துக்கம் விலகாத நிலையில், பனையூரில் விஜயின் பரப்புரை வாகனம், கட்சி நிர்வாகிகள் பயணித்த வாகனம், விஜய்யின் கார் உள்ளிட்டவற்றை அலங்கரித்து ஆயுத பூஜை கொண்டாடப்பட்ட சம்பவம் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தின் துக்கம் விலகாத நிலையில், தவெக கட்சி அலுவலகமான பனையூரில் விஜய் சென்ற பரப்புரை வாகனம், கட்சி நிர்வாகிகள் பயணித்த வாகனம், விஜய்யின் கார் உள்ளிட்டவற்றை அலங்கரித்து ஆயுத பூஜை கொண்டாடப்பட்ட சம்பவம் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் விஜய் நடத்திய தவெக பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், சம்பவம் குறித்து அறிந்தும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறாமல் சம்பவம் நடந்துகொண்டிருக்கும்போதே விஜய் சென்னை புறப்பட்டுச் சென்றார். திருச்சி விமான நிலையத்தில் துயர சம்பவம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்காமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். சம்பவம் நடந்து 3 மணி நேரம் கழித்து நீலாங்கரை வீட்டிற்கு சென்று ட்விட்டரில் இச்சம்பவம் குறித்த தனது வருத்தத்தைப் பதிவு செய்திருந்தார். அதுபோல் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரையும் உயிரிழந்தவர்களின் உறவினர்களையும் பல்வேறு கட்சித் தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறியிருந்த நிலையில் தவெக சார்பில் ஒரு நிர்வாகி கூட சந்திக்கச் செல்லாததை அரசியல் விமர்சகர்கள் முதல் சாமான்யர்கள் வரை பலரும் கேள்வி எழுப்பிவருகிறார்கள்.

இந்த நிலையில் சம்பவம் நடந்த 3 நாட்கள் கழித்து அதுகுறித்து விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டார். ஆனால், 41 பேர் உயிரிழப்புக்கு பொறுப்பேற்காமல், முதலமைச்சரை குறிப்பிட்டு பேசியிருக்கிறார் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில்தான், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குறித்த உரையாடல்கள் குறித்து விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும் நிலையில், தவெக தலைவர் விஜயின் பனையூர் இல்லத்தில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜயின் பரப்புரை வாகனங்களுக்கு வாழை கன்று கட்டி மாலை அணிவித்து நிர்வாகிகள் பூஜை செய்துள்ளனர். அது போல் நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிலும் அவருடைய கார்களுக்கு ஆயுத பூஜை கொண்டாட்டம் நடந்துள்ளது.

விஜயைக் காண வந்து உயிரிழந்த 41 பேருக்கு விஜய் செய்யும் மரியாதை இதுதானா ? குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறாவிட்டாலும், நெஞ்சில் குடியிருக்கும் நண்பா, நண்பி என்று எப்போதும் விளிக்கும் விஜய், இத்தனை பேரின் இழப்பைக் கூடப் பொருட்படுத்தாமல் இப்படித்தான் கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்களா அக்கட்சியினர் என்னும் கேள்வியை எழுப்பி நெட்டிசன்கள் விமர்சித்துவருகிறார்கள்.