தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம், தேமுதிக நேரம் கேட்டுள்ளது. இதனிடையே உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்பதால் இன்று நடைபெற இருந்த ஆலோசனை கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.
கடந்த வாரம் வரை அதிமுக - தேமுதிக கூட்டணி இந்த முறை சாத்தியமா என்ற கேள்வி பரவலாக இருந்த சூழலில் சனிக்கிழமை அன்று அமைச்சர்கள் திடீரென தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தனர். அதன்மூலம் இந்த முறையும் கூட்டணி தொடர்கிறது என்பது உறுதியானது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்த கையோடு அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் தேமுதிகவுக்கு 12 தொகுதிகள் ஒதுக்குகிறோம் என்று கூறியதாக தகவல் வெளியானது. ஆனால் அதனை தேமுதிக ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தேமுதிக துணைச் செயலாளர் பார்த்தசாரதி, அவைத்தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர் அமைச்சர் தங்கமணியை அவரது இல்லத்தில் சந்தித்து இரண்டாவது கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் ஒரு தொகுதி கூடுதலாக தர அதிமுக முன்வந்ததாக தகவல் வெளியானது. ஆனால், தேமுதிக தரப்பிலோ பாமகவுக்கு இணையான தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
அதிலும் உடன்பாடு எட்டப்படாததால் காலை 11 மணிக்கு மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தைக்கு அமைச்சர் தங்கமணி இல்லத்திற்கு புறப்பட தேமுதிக நிர்வாகிகள் தயாராக இருந்தனர். அப்போது அமைச்சர் தரப்பில் இருந்து அதிகபட்சமாக 15 தொகுதிகள் தான் ஒதுக்கீடு செய்ய முடியும் என்று கறாராக கூறியதாக தகவல் வெளியானது. இதனையடுத்து தேமுதிக நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு செல்லாமல் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்றனர். இதனிடையே பெரம்பலூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தலையே போனாலும் தேமுதிகவை தலைகுனிய விடமாட்டோம் என்று தெரிவித்தார்.
தேமுதிக பொருளாளர் பிரேமலதா தலைமையில் கட்சி நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் நேரம் கேட்டுள்ளார். இது அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடர விரும்புகிறது என்பதையே காட்டுகிறது.