தமிழ்நாடு

விஜயகாந்தின் உடல்நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது - பிரேமலதா

விஜயகாந்தின் உடல்நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது - பிரேமலதா

ச. முத்துகிருஷ்ணன்

விஜயகாந்தின் உடல்நிலையில் சற்று தொய்வு இருப்பதாகவும், விரைவில் அவர் மீண்டு வருவார் என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிகழ்ச்சியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் விஜயகாந்தின் உடல்நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மருத்துவர்களின் அறிவுறுத்தல் படி தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் விரைவில் பூரண உடல்நலத்துடன் விஜயகாந்த் மீண்டு வருவார் என்றும் பிரேமலதா தெரிவித்தார். மேலும் அவர், “ஒரு பெண் வேட்பாளராக திரௌபதி முர்முவுக்கு பெண் சமுதாயத்தின் சார்பாக வாழ்த்துகள். நல்ல வேட்பாளரை தேர்வு செய்த பிரதமருக்கு வாழ்த்துகள். அவர் வெற்றி பெறுவது உறுதி. தமிழ்நாட்டுக்கும் பழங்குடியினருக்கும் நீண்ட தொடர்பு உண்டு. தமிழ் கடவுள் முருகனின் மனைவி வள்ளியும் பழங்குடியினத்தை சேர்ந்தவர் தான்.

வெற்றி பெற்று தமிழ்நாட்டில் உள்ள பழங்குடி மக்களுக்கும் ஏழை மக்களுக்கும் சேவை செய்வேன் என திரௌபதி என்னிடம் தெரிவித்தார் என்றார். அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்த கேள்விக்கு கருத்து சொல்ல விருப்பமில்லை. இருவரில் யார் வெற்றி பெற போகிறார், என்ன முடிவு ஆக போகிறது என்பதை காண காத்திருக்கிறோம் ” என்று தெரிவித்தார்.