மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், தேமுதிகவினர் பேரணிக்கு அனுமதி கோரியிருந்தனர். தமிழக அரசு அனுமதி மறுத்து இருந்தது. இதைக் குறிப்பிட்டு, பேரணிக்கு தமிழக அரசு விஜயகாந்த்தை அவமதித்துவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு நாள் இன்று அக்கட்சியினர் சார்பில் குருபூஜையாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி 15,000 பேருக்கு இன்று நாள் முழுவதும் தேமுதிக சார்பில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஜயகாந்தின் நினைவு நாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அவரது நினைவிடத்தில் குவிந்துள்ளனர்.
முன்னதாக விஜயகாந்த் நினைவு நாளை ஒட்டி, அமைதி ஊர்வலம் நடத்தப்படும் என தேமுதிக அறிவித்திருந்தது. இதற்காக தமிழக அரசிடம் அனுமதி கோரி இருந்த நிலையில் தமிழக அரசு அனுமதி மறுத்தது. இருப்பினும், தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தடையை மீறி பேரணி தொடங்கியது.
இதனிடையே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
இதனை தொடர்ந்து பத்திரிகையாளரிடம் பேசிய சீமான், “விஜயகாந்தின் நினைவு நாளை முன்னிட்டு அமைதி பேரணி நடத்த தமிழக அரசு அனுமதி மறுத்திருப்பது விஜயகாந்திற்கு இழைக்கப்பட்ட அவமரியாதை... எல்லா மக்களாலும் நேசிக்கப்படுகின்ற ஒரு புரட்சிக் கலைஞராக இருந்தவர். எளிய பின்புலத்தில் இருந்து வந்ததாலேயே ஏழை எளிய மக்கள், உழைக்கும் மக்கள், பசியோடு இருக்கிற பாட்டாளி மக்கள் மீது அதிக பாசம் கொண்டிருந்தவர். அதனாலேயே அவரை மக்கள் பாசத்துடன் கேப்டன் என்று அழைத்தனர்” என்றார்.