அரசு பேருந்து கட்டணத்தை குறைத்தது போல் நாடகம் ஆடுவதாக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயாகந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு பேருந்து கட்டணங்களை குறைத்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வெளியூர்களுக்கு செல்லும் சாதாரண பேருந்துகளில் கட்டணம் ஒரு கிலோ மீட்டருக்கு 60 பைசாவிலிருந்து 58 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது. விரைவுப் பேருந்துகளில் கட்டணம் 80 பைசாவிலிருந்து 75 பைசாவாகவும், சொகுசுப் பேருந்துகளில் 90 பைசாவிலிருந்து 85 பைசாவாகவும், அதி நவீன சொகுசுப் பேருந்துகளில் 110 பைசாவிலிருந்து 100 பைசாவாகவும், குளிர்ச்சாதன பேருந்துகளில் 140 பைசாவிலிருந்து 130 பைசாவாகவும் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரப் பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணம் 5 ரூபாயிலிருந்து 4 ரூபாயாகவும், பிற நகர்புற பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணம் 5 ரூபாயிலிருந்து 4 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள விஜயகாந்த், “5% முதல் 10% வரை குறைத்து, தமிழக அரசு பேருந்து கட்டணத்தை குறைத்து விட்டதுபோல் நாடகம் ஆடுவதை வன்மையாக கண்டிக்கிறேன். உயர்த்தப்பட்ட கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.