முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, விளவங்கோடு தொகுதியில் பாஜக ஆதரவை அதிகரிக்க மழையில் நனைந்து பேசியது கவனத்தை பெற்றுள்ளது. அவர் தனது பதவிக் காலத்தில் செய்த வளர்ச்சி திட்டங்களை பட்டியலிட்டு, தற்போதைய அரசின் குறைகளை சுட்டிக்காட்டி, பாஜகவை ஆதரிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பாஜக சார்பில், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி பூத் பொறுப்பாளர்கள் மாநாடு மேல்புறம் அருகே மேற்கு மாவட்ட தலைவர் RT சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.
மாநில அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம், மாநில செயற்குழு உறுப்பினரும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான விஜயதரணி, தொகுதி அமைப்பாளர் நந்தினி, தொகுதி இணை அமைப்பாளர் ரெத்தினமணி உட்பட பாஜக கிளை, பூத், மண்டல, ஒன்றிய, மாவட்ட, மாநில, அளவிலான அணி பிரிவுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மழை கொட்டித்தீர்த்தபோதும், கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் நிகழ்சி துவங்கியது.
தொடர்ந்து மேடையில் கொட்டும் மழையில் நனைந்து கொண்டே தனது பேச்சை தொடங்கிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, தான் MLA ஆக இருந்த போது தொகுதிக்கு செய்த வளர்ச்சி திட்டங்களை பட்டியலிட்டு பேசினார்.
மலையோர சாலைகள், நெடுஞ்சாலை பணிகள், மார்த்தாண்டம் மேம்பால பணிகளின்போது தனது பங்களிப்பு குறித்தும், விளவங்கோடு தொகுதி மக்களுக்காக தனது செயல்பாடுகள் குறித்தும் மேடையில் விளக்கம் அளித்து பேசினார். மேலும் தற்போது தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகள் அதிகரித்து சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டிருப்பதாக கூறிய அவர், வரும் தேர்தலில் மாநில ஆட்சி மாற்றத்திற்கும் விளவங்கோடு மக்கள் பாஜகவை ஆதரிக்க வேண்டிய அவசியம் குறித்தும் ஒவ்வொரு வீடாக சென்று மக்களிடம் எடுத்து கூறி விளவங்கோடு தொகுதியை கைப்பற்ற பொறுப்பாளர்கள் செயல்பட வேண்டும் எனவும் கூறினார்.
காங்கிரஸ் கட்சியில் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதாரணி, அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த பிறகு மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக பதவி பெற்று முதல் முறையாக இந்த பூத் கமிட்டி தொகுதி பொறுப்பாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். விளவங்கோடு பகுதியை கைப்பற்றும் விதமாக பேசிய அவருடைய பேச்சு கவனத்தை பெற்றுள்ளது..