பாஜக விஜயதரணி
பாஜக விஜயதரணி புதிய தலைமுறை
தமிழ்நாடு

“நான் ஃபியூஸ் போன பல்பு இல்லை, பிரகாசமாக எரியும் LED பல்பு...”- பாஜக விஜயதரணி

ஜெனிட்டா ரோஸ்லின்

பாஜகவில் அண்மையில் இணைந்த விஜயதரணி, அக்கட்சியில் இணைந்தது ஏன் என்பது குறித்தும், காங்கிரஸில் பெண்களுக்கு அங்கீகாரம் மறுக்கப்படுவது குறித்தும் தெரிவித்துள்ளார்.

விஜயதரணி

கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்து பேசிய அவர், “பெண்களுக்கான தளம் என்பது காங்கிரஸ் கட்சியில் மறுக்கப்பட்டதாகவே இருக்கிறது. என்னை தவிர 14 ஆண்டுகாலமாக ஒரு பெண்கூட சட்டமன்ற உறுப்பினராக அங்கு கிடையாது. என்னையும் தக்கவைத்துக் கொள்ள முடியாத நிலைதான் காங்கிரஸ் கட்சியில் இன்று உள்ளது. குறிப்பாக அரசியல் தளத்தில் பணியாற்றும் பெண்களுக்கு சிரமத்தினை உண்டாக்குகிறார்கள். என் மாணவ காங்கிரஸ் பருவத்திலிருந்து 33 ஆண்டுகளாக எந்த கட்சிக்கும் செல்லாமல் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வருகிறேன்.

அப்படிப்பட்ட நான், இப்பொழுது இந்த முடிவை எடுத்துள்ளேன் என்றால், எனது முடிவை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். தலைமை பதவி என்றால், பெண்களுக்கு தரக்கூடாது என்ற காங்கிரஸின் எண்ணம் தவறு. தலைமைப் பதவிக்கு வந்தால் பெண்களால் பணியாற்ற முடியாதா? நிச்சயமாக முடியும்.

ஆனால் இதில் அவநம்பிக்கை கொண்டவர்கள்தான் காங்கிரஸ் கட்சியினர். என்னைப்போன்று பல ஆண்டுகாலமாக இருப்பவர்களுக்கே இந்த பிரச்னை என்றால், இளம் பெண்களுக்கு என்ன அங்கீகாரம் கிடைக்கும்? ஆனால் பெண்களுக்கு தலைமைத்துவம் உள்ளது என்பதை உணர்த்தும் கட்சி பாஜக. பாஜகவில் ஏராளமான பெண் எம்.பி.க்கள், எம் எல் ஏக்கள் மக்கள் பணியாற்றுகின்றனர். இப்படியான பாஜகவின் வெளிப்பாடுதான் என்னுடைய நிலைப்பாடுக்கு காரணம். அதனால்தான் இன்று பாரதிய ஜனதாவில் இணைந்துள்ளேன். பிரதமர் மோடி பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை சட்டமாக்கியுள்ளார். விரைவில் அது அமல்படுத்துப்படும் என்ற கூறப்பட்டுள்ளது.

இஸ்லாமிய பெண்களுக்காக முத்தலாக் சட்டத்தினை இன்று ஒழித்து கட்டியுள்ளார். அவர்களுக்கு சொத்தில் சம உரிமைய வாங்கி கொடுத்துள்ளார். ஆகவே இஸ்லாமிய பெண்கள் உறுதியாக தாமரைக்குதான் ஓட்டுப்போடுவார்கள். மட்டுமன்றி நான் ஃபியூஸ் போன பல்பு இல்லை, பிரகாசமாக எரியும் எல்.இ.டி பல்பு.

37 ஆண்டுகள் உழைத்த எனக்கு காங்கிரஸ் கட்சியில் துரோகம் செய்துள்ளார்கள். டிவியில் பேட்டி கொடுக்கிறார்கள், ஆனால் எனக்கு ஃபோன் கூட செய்யவில்லை. எத்தனை வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டது என்று சபாநாயகர் கேளுங்கள். போராடிதான் சட்டமன்றத்தில் வாய்ப்பு அளிக்கப்பட்டது எனக்கு. இது உங்களுக்குமே தெரியும்.

சட்டமன்ற தலைவர் பதவியும் மக்களுக்காகதான் பெற்றேன். ஆனால் அதுவும் எனக்கு முடிவு செய்யப்பட்டு விட்டு, பின்பு வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டது. பெண் என்பதாலேயே எனக்கு அது மறுக்கப்பட்டது. எங்கே என்றாலும் தவறு நடந்தால் தட்டி கேட்பேன். பாஜக எனக்கு மரியாதை கொடுக்கிறார்கள், மக்கள் தளத்தில் பணியாற்ற வாய்ப்பு தருவார்கள், அதுவே மகிழ்ச்சி” என்றார்.