சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வருமான வரித்துறை புலனாய்வுப்பிரிவு அலுவலகத்தில் இன்று ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருமானவரித்துறை சம்மனை ஏற்று அவர் நுங்கம்பாக்கத்திலுள்ள அலுவலகத்தில் இன்று ஆஜராக இருப்பதாக கூறப்படுகிறது. விஜயபாஸ்கரின் தந்தை புதுக்கோட்டையில் நடத்திவரும் கல்குவாரியில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரிக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஏற்கனவே அமைச்சர் விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. இதே விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பியிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
முன்னதாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றினர். இந்த வழக்கில் ஏற்கனவே விஜயபாஸ்கரின் மனைவி, சகோதரர் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறையினர் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர். அதில் கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடத்திட ஜூலை 21 ஆம் தேதி (இன்று) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.