தமிழ்நாடு

கொசு உற்பத்தி: உணவகங்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை

கொசு உற்பத்தி: உணவகங்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை

webteam


கொசு உற்பத்தியாக காரணமாக இருக்கும் உணவகங்கள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு 2ஆவது நாளாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், தொற்று நோய்த் தடுப்பு இயக்குநர் குழந்தைசாமி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த செவிலியர் கல்லூரி முதல்வர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தக் கருத்தரங்கில் பொதுமக்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் செவிலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.‌ 

அடுத்ததாக, சென்னை பாரிமுனையிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு தொடர்புடைய அனைத்துத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. அதில், மாநகராட்சி, உணவு பாதுகாப்பு, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயக்குமார், செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அனைத்துத் துறையும் ஒருங்கிணைந்து டெங்குக் கொசுக்களைக் கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கொசு உற்பத்தியாக காரணமாக இருக்கும் உணவகங்கள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்