தமிழ்நாடு

கொரோனாவை தடுக்க இதுதான் வழி : அமைச்சர் விஜயபாஸ்கர் கொடுத்த அட்வைஸ்

கொரோனாவை தடுக்க இதுதான் வழி : அமைச்சர் விஜயபாஸ்கர் கொடுத்த அட்வைஸ்

webteam

கொரோனா பரவலை தடுக்கும் வழிமுறைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 64,603 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 833 ஆக உள்ளது. சிகிச்சைப் பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 35,339 ஆக உள்ளது.

சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 44,205 ஆக உள்ளது. இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆடியோ ஒன்றை பேசி வெளியிட்டுள்ளார். அதில், “கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸை எதிர்த்து நாம் அனைவரும் போராடிக்கொண்டிருக்கும் இந்த சூழலில் இரண்டு விஷயத்தை கடைபிடிக்க வேண்டும். அதாவது வெளியில் செல்லும்போது கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். வெளியில் சென்று வந்தால் கை கால்களை சோப்பு போட்டு தேய்த்துக் கழுவ வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “நம்முடைய சுயகட்டுப்பாடு மிகவும் முக்கியம். மக்கள் ஒத்துழைப்பு என்பது மிக மிக அவசியம். இது ஓவ்வொருவருடைய உயிரை காப்பதற்காக சொல்கிறோம். தடுப்பூசி மற்றும் மருந்தே இல்லாத இந்த நோயை சுயகட்டுப்பாடு இருந்தால்தான் எதிர்கொள்ள முடியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.