தவெக விஜய் pt web
தமிழ்நாடு

நாளை தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம்.. விஜய் அறிவிக்க இருக்கும் சீக்ரெட்ஸ்?

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நாளை நடைபெறுகிறது. இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் விஜய் தனது சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பை வெளியிடக்கூடும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

PT WEB

செய்தியாளர்: சந்தானம்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நாளை நடைபெறுகிறது. இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் விஜய் தனது சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பை வெளியிடக்கூடும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி பதிவு செய்யப்பட்ட கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை நடத்த வேண்டும் என விதிமுறை உள்ளது. அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது.

தவெக தலைவர் விஜய்

சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும் இந்த பொதுக்குழுக் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கினாலும், காலை 7 மணி முதல் கட்சியினர் அனுமதிக்கப்பட உள்ளனர். கட்சியின் விதிமுறைப்படி 15 நாட்களுக்கு முன்பு தேதி அறிவிக்கப்பட்டு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல், வாட்ஸ்அப் மற்றும் தபால் மூலம் தனித்தனியாக அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளது. தலைமைக்கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 2,150 பேர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காலை 10 மணிக்கு தொடங்கும் கூட்டம் நண்பகல் ஒரு மணி வரை நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை,அரசு ஊழியர்கள் போராட்டம், இருமொழிக் கொள்கை, தொகுதி வரையறை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து தீர்மானங்கள் கொண்டுவரப்பட வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 15 முதல் 20 தீர்மானங்கள் கொண்டுவரப்படலாம் எனக் கூறுகின்றனர். கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் பொதுக்குழுவை தொடர்ந்து பூத் கமிட்டி மாநாடு நடைபெறும் என தெரிவித்த நிலையில் அதற்கான தேதியை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விஜய்

இது மட்டும் இல்லாமல் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் கட்சியின் பணிகளை தீவிரப்படுத்துதல் தொடர்பாகவும்,மாவட்ட செயலாளர்கள் அடுத்த கட்டமாக தங்களுடைய மாவட்டங்களில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் விரிவான அறிவுரையை விஜய் வழங்குவார் எனக் கூறப்படுகிறது, விஜயின் கடைசி திரைபடத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதத்துடன் முடிவடையும் நிலையில் அவரின் சுற்றுப்பயணம் குறித்தான ஒரு சமிக்ஞையை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.