விஜய் Pt web
தமிழ்நாடு

உடைந்தன தடைகள்.. நாளை பதவியேற்பு.. நேரம் குறித்த விஜய்!

தமிழகத்தில் ஆட்சி அமைக்க தவெகவுக்கு பெரும்பான்மை எண்ணிக்கை கிடைத்துள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் நாளை முதல்வராக பதவியேற்கிறார். மேலும், அவருடன் சேர்த்து 9 அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Premkumar S

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக தேர்தலை சந்தித்திருக்கும் தவெக தனிப் பெரும்கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. எனினும், ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் ஐயூஎம்எல் போன்ற கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து தவெக ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்திருக்கிறது. இதன்மூலம், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை எண்ணிக்கையை தவெக கடந்த நிலையில், இன்று இரவு தவெக தலைவர் விஜய், காங்கிரஸ் மற்றும் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ள கட்சிகளின் தலைவர்களுடன் சேர்ந்து ஆளுநரை சந்தித்தார்.

விஜய் - ஆளுநர்

ஆளுநரின் சந்திப்பில், நாளையே ஆட்சி அமைக்க தவெக தரப்பில் இருந்து கோரியதை ஆளுநர் ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தசூழலில் தான், தமிழ்நாடு 17-வது சட்டப்பேரவையின் முதல்வராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்கவிருக்கிறார். இதற்கான, பதவியேற்பு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் என கூறப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு முதல்வராக நாளை பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ள நிலையில், விஜயுடன் சேர்த்து 9 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதேசமயம், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.