சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளான மே 4ஆம் தேதி காலை முதலே விசில் சத்தம் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. திமுகவும், அதிமுகவும் இரண்டாம் இடத்துக்கு போட்டிப் போட்டு கொண்டிருக்க, வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தவெக 108, திமுக கூட்டணி 73, அதிமுக கூட்டணி 53 என எண்கள் நின்றன. தவெக எதிர்கொண்ட முதல் தேர்தலிலேயே தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்தது என்றாலும் கூட பெரும்பான்மைக்கு தேவையான மேஜிக் நம்பர் 118 இல்லாததால் ஆட்சியமைக்க முடியாத நிலை உருவானது. இருந்தபோதும் அன்றைய தினமே, ஆட்சியமைக்க தவெக சார்பில் ஆளுநருக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.
இதற்கிடையே அதிமுகவின் சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி தலைமையில் அக்கட்சி எம். எல்.ஏ.க்கள் அணிவகுத்தது தவெகவின் ஆட்சி கனவுக்கு தடைக்கல்லாக பார்க்கப்பட்டது. மே 5ஆம் தேதி மு.க.ஸ்டாலின் முதல்வராக ராஜினாமா செய்யவே, தவெகவின் சட்டமன்ற குழுத் தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்டார். அன்றைய தினமே, அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை மேற்கொண்ட அக்கட்சி பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, தவெகவுக்கு ஆதரவு இல்லை என்றுகூறி ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதனால் தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது.
மே 6ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்துக்கு காங்கிரஸ் கட்சியின் ஐந்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்தது. அதுவும் ஆதரவுக் கடிதத்தில், பல பத்தாண்டுகளுக்கு இணைந்து செயல்படுவோம் என்று காங்கிரஸ் குறிப்பிட்டது தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சிக்கு அருகே அழைத்துச் சென்றது. இருப்பினும் பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையில், 6 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவில்லாமல் தவெக தவிக்கும் சூழல் ஏற்பட்டது. முஸ்லீம் லீக் கட்சி தவெகவுக்கு ஆதரவு மறுக்கவே, மேலும் சிக்கல் ஏற்பட்டது.
இத்தகைய சூழலில், தமிழக அரசியலில் பூகம்பமாக பரவியது திமுக- அதிமுக கூட்டணியுடன் ஆட்சி அமைக்கப்படும் என்ற தகவல். இதனால் தவெகவுக்கு ஆட்சி இல்லை என்ற சூழலும் அன்றைய தினம் எழுந்தது.. பரபரப்பான சூழலில், மே 7ஆம் தேதி ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய். ஆனால் தவெகவிடம் பெரும்பான்மைக்கான எண்ணிக்கை இல்லாததால், விஜய்யின் ஆட்சிக் கனவை ஒத்திவைத்தார் ஆளுநர் அர்லேகர். மேலும் தவெக அல்ல, திமுக- அதிமுக இணைந்து கூட்டணி அமைத்து வந்தாலும், அவர்களுக்கு 118 எண்ணிக்கை இருந்தால் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பேன் என்று அர்லேகர் கூறி தமிழக வெற்றிக் கழகத்தை அதிரவைத்தார்.
மேலும், அதே நாளில் திமுக எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்திய அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தனது முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்று கூறியதும் தவெகவின் ஆட்சிக் கனவுக்கு தடைக்கல்லாக பார்க்கப்பட்டது. இரண்டு நாட்களாக நெருக்கடியில் இருந்த தவெகவுக்கு மே 8ஆம் தேதி நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைந்தது. திமுக- அதிமுக கூட்டணி அமைப்பதாக வரும் தகவல்கள் வதந்தி என்று கூறி அனைத்து ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார் திமுக துணைப் பொதுச் செயலர் கனிமொழி. அன்றைய தினமே, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இரண்டு இடதுசாரி கட்சிகளும் ஒரே நேரத்தில் தவெகவுக்கு ஆதரவளித்தன. இதனால் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கான பலம் 116 ஆனது.
இதனை அடுத்து ஆளுநரை மீண்டும் சந்தித்து, தன்னிடம் பெரும்பான்மை எண்ணிக்கை உள்ளதாகக் கூறி ஆட்சி அமைக்க விஜய் உரிமை கோரினார். ஆனால் இம்முறையும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. முஸ்லீம் லீக் ஆதரவு இல்லை என்று திடீரென்று கூறியதும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. அதேவேளையில் அமமுக எம்எல்ஏ காமராஜ் ஆதரவுக் கடிதம் கொடுத்ததாக தவெகவினர் ஆளுநரிடம் கொண்டுபோக, அது போலி என்றும், குதிரை பேரம் நடந்ததாக டிடிவி தினகரன் சொல்ல தவெகவின் ஆட்சிக் கனவு என்னவாகும் என்ற நிலை எழுந்தது.
மே 9ஆம் தேதி, தவெகவுக்கு பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை இரண்டாக இருந்தநிலையில், அனைத்து கண்களும் திருமாவளவனை நோக்கித் திரும்பின. விசிகவின் முடிவு என்ன என்று ஒட்டுமொத்த தமிழகமே காத்திருக்க, அக்கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை திருமாவளவன் தவெகவுக்கு வழங்கினார். இதனால் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சிக் கனவுக்கு இருந்த கடைசி தடைக்கல் தகர்க்கப்பட்டது. 118 என்ற மேஜிக் நம்பரை தவெக அடைந்த நிலையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் இரண்டு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை வழங்கியது. இதனால் தவெகவின் பலம் 120ஆனது.