கூட்டணி கட்சி கலந்துரையாடல்கள் Pt web
தமிழ்நாடு

தவெக தலைமையில் புதிய கூட்டணி? நாளை ஆதரவு கட்சிகளை சந்திக்கும் விஜய்!

முதல்வர் விஜய், தோழமைக் கட்சிகளுடன் கலந்துரையாட திட்டமிட்டுள்ளார். நாளை நடைபெறவுள்ள அந்த கூட்டத்திற்கு விசிக, மதிமுக மற்றும் ஐயுஎம்எல் கட்சிகளுக்கு தவெக அழைப்பு விடுத்துள்ளது. என்ன விவரம் என பார்க்கலாம்.

திவ்யா தங்கராஜ்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக இரு பிரதான திராவிட கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க அழைக்கக் கோரி ஆளுநரிடம் தவெக தலைவர் விஜய் கோரிக்கை வைத்த நிலையில், பெரும்பான்மைக்கான பட்டியலை அளிக்குமாறு அவர் கேட்டிருந்தார். இந்த நிலையில் விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம், ஐயுஎம்எல் கட்சிகளிடம் தவெக ஆதரவு கேட்டிருந்தது. 5 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ், முதல் கட்சியாக ஆதரவளித்த நிலையில், கம்யூனிஸ்ட்கள், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளும் அதைத்தொடர்ந்து ஆதரவு அளித்தன. காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விசிக, ஐயுஎம்எல் ஆகியவை அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளன.

அமைச்சரவை

திமுக கூட்டணியில் இருந்து தேர்தலை சந்தித்த கட்சிகள் தேர்தல் முடிவிற்கு பிறகு தவெகவிற்கு ஆதரவு அளித்த காரணத்தால் திமுகவால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகின. மறுபுறம் இந்த ஆட்சி நீடிக்காது என திமுக தலைவர் ஸ்டாலினும் தொடர்ந்து கூறிவருகிறார். அதே போல இந்தியா கூட்டணி கூட்டத்திலும் திமுக பங்கேற்கவில்லை. திமுக கூட்டணியில் இருந்த கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு அளித்ததால் புதிய கூட்டணி உருவாகிறதா என்ற கேள்வியும் எழுந்து இருக்கிறது.

இந்த நிகழ்வுகளுக்கு மத்தியில், ஜூலை 1ஆம் தேதி முதல்வர் விஜய் தலைமையில் சென்னையில் தோழமைக் கட்சிகளுடான ஆலோசனைக் கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தோழமை உறவுகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், அவர்களோடு கலந்துரையாடவும் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கூட்டத்தில் கலந்துகொள்ள ஆதரவு கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் இதற்காக தோழமை கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர். தவெக ஆட்சி அமைத்த பிறகு, கூட்டணி கட்சிகளுடனான முதல் ஆலோசனைக் கூட்டம் இதுவாகும். எதிர்கால திட்டங்கள், பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய திட்டங்கள், மக்கள் நலப்பணிகள் குறித்து பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் விஜய்

முக்கியமாக கம்யூனிஸ்ட்கள், விசிக ஆகியவை தவெக கூட்டணியில் இருப்பதாக இதுவரை சொல்லவில்லை. ஆதரவு என்ற நிலைப்பாட்டில் தான் இருக்கின்றன. ஆட்சி மீதும், முதல்வர் மீதும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றன. இந்நிலையில் தவெக தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்கி அதில் ஆதரவு கட்சிகளை உள்ளடக்க முயற்சி நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. கூட்டணிக்கு புதிய பெயர் வைக்கவும் திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.