விஜய் - விஜயகாந்த் web
தமிழ்நாடு

”என்னுடைய அண்ணன் கேப்டன் விஜயகாந்த்..” - விஜய் பேச்சால் விண்ணை முட்டிய தொண்டர்கள் முழக்கம்!

மதுரை மாநாட்டில் புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் பெயரை குறிப்பிட்டு பேச்சை ஆரம்பித்தார் தவெக தலைவர் விஜய்.

Rishan Vengai

தமிழக அரசியல் களத்தில் புதிய உதயமாக மாறியிருக்கும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியானது, வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலை நோக்கி முழுவீச்சாக செயல்பட்டு வருகின்றது. அதன் பெரிய ஆக்கமாக, மக்களை கவர்ந்திழுக்கும் பெரும் முயற்சியாக மாறியிருக்கிறது இரண்டாவது மாநில மாநாடு.

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை பாரபத்தி பகுதியில் இன்று பெரும் மக்கள் படை சூழை நடைபெற்று முடிந்துள்ளது. விஜய் தலைமையில் விக்கிரவாண்டியில் நடத்தப்பட்ட முதல் தவெக மாநாடே தமிழக அரசியல் களத்தில் புயலை கிளப்பிய நிலையில், சட்டசபை தேர்தலையொட்டி நடக்கும் இரண்டாவது மாநாட்டில் விஜய் என்ன பேசப்போகிறார்.

அவரது வியூகம் என்ன?... எதிர்க்கட்சிகள் குறித்து எத்தனை வார்த்தைகள் பேசுவார்?... கொள்கை விளக்கம் என்ன?... மக்களைக் கவரும் அறிவிப்புகள் என்ன?... குறிப்பாக மக்களோடு மக்களாக நிற்க விஜய் இந்த மாநாட்டை எந்த அளவு பயன்படுத்திக் கொள்வார் என்பதுதான் அனைவரது கேள்வியாகவும், எதிர்ப்பார்ப்பாகவும் மாறி இருந்தது.

இந்நிலையில் மதுரையில் தொடங்கியிருக்கும் இரண்டாவது மாநாட்டில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றினார்.

என்னுடைய அண்ணன் கேப்டன் விஜயகாந்த்..

மக்களின் பெரும் வெள்ளத்தில் தொடங்கப்பட்ட மதுரை மாநாட்டில் தொண்டர்கள் படைசூழ நடந்துவந்த தவெல தலைவர் விஜய், கொள்கை தலைவர்களுக்கு மலர்தூவி மரியாதை செய்து கட்சிக்கொடியை ஏற்றிவைத்தார்.

அதற்குபிறகு மக்களிடையே பேசிய தவெக தலைவர் விஜய், ‘ஒரு சிங்கம்’ என ஒரு குட்டிக்கதை சொல்லி எப்போதும் போல ஆரம்பித்தார். தொடர்ந்து மதுரை மண்ணை குறிப்பிட்டு பேசிய விஜய், “மதுரைன்னாலே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும், அழகர் திருவிழாவும், மீனாட்சியம்மனும் நினைவுக்கு வருவாங்க. ஆனால் மாநாட்டுக்காக இந்த மண்ணுக்கு வந்தவுடன், எனக்கு மனசுக்குள் ஓடியது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பற்றிதான்; ஆனால் அவரோடு பழகும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.

ஆனால் அவரைப்போலவே குணம் கொண்ட என்னுடைய அண்ணன், புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களோடு பழகும் வாய்ப்பு எனக்கு நிறையவே கிடைத்தது. மதுரை மண்ணை சேர்ந்த அவரை மறக்க முடியுமா?” என கேப்டன் விஜயகாந்த் பெயரை குறிப்பிட்ட உடன் மதுரை மாநாடே சத்தத்தில் அதிர்ந்தது.

தொடர்ந்து பேசிய விஜய் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவையும், தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திமுகவையும் விமர்சித்தார்.

விஜய் சொன்ன சிங்கக் கதை:

சிங்கம் வேட்டைக்கு மட்டும்தான் வெளிய வரும்.. வேடிக்க பாக்க வெளிய வராது. வேட்டையில கூட தன்னவிட பெரிய மிருகங்களதான் குறிவச்சு தாக்கும்; ஜெயிக்கும். எவ்வளவு பசியிருந்தாலும் உயிரில்லாதத தொட்டுக்கூட பார்க்காது. அப்படிப்பட்ட சிங்கம் அவ்வளவு ஈஸியா எதையும் தொடாது.. தொட்டா விடாது. காட்டின் நான்கு பக்கமும் தன் எல்லையை தானே வகுக்கும். அப்படிதான் காட்டையே தன் கட்டுக்குள் வைத்திருக்கும். சிங்கத்திற்கு கூட்டத்தோடு இருக்கவும் தெரியும் தனியாக இருக்கவும் தெரியும். எப்பவும் தன் தனித்தன்மையை இழக்காது. LION IS ALWAYS A LION” என்றார்.