விஜய் - மாணிக்கம் தாகூர் Pt web
தமிழ்நாடு

பிரதமர் வேட்பாளர் சர்ச்சை.. முதல்வர் விஜய் - மாணிக்கம் தாகூர் சந்திப்பு!! பின்னணி என்ன?

அடுத்த பிரதமர் வேட்பாளர் யார்? என்பது தவெக கூட்டணியில் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், தலைமை செயலகத்தில் முதல்வர் விஜயை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் சந்தித்துள்ளார்.

Premkumar S

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றியது. எனினும், ஆட்சியமைக்க போதிய பெரும்பான்மை இடங்கள் கிடைகாத நிலையில், பின்னர் காங்கிரஸ், விசிக, IUML, இடதுசாரி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைத்திருக்கிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

கட்சி தொடங்கி இரண்டரை ஆண்டுகளிலேயே தவெக ஆட்சியைப் பிடித்தது இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிய நிலையில், தமிழ்நாடு முதல்வர் விஜயை முன்னிறுத்தி இந்தியாவின் வெவ்வேறு மொழிகளில் செய்திகள் மற்றும் ரீல்ஸ்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து, பிரதமர் வேட்பாளாராக விஜயை முன்னிறுத்திக் கொள்ள இந்த திட்டங்களை தவெக செயல்படுத்துகிறதா? என்ற சந்தேகம் எழுந்தது.

முதல்வர் விஜய்

இந்தச்சூழலில் தான், சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்தும், தென்னிந்தியாவில் இருந்தும் ஒரு பாரத பிரதமர் உருவாக்கப்பட வேண்டும் என்று கூறினார். அவர் முதல்வர் விஜயை குறிப்பிட்டே அப்படிச் சொன்னதாக பல்வேறு அரசியல் விமர்சகர்களும் கருத்து தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, தவெகவின் எம்.எல்.ஏ-க்கள் பலரும் விஜய் இந்தியாவின் பிரதமராவார் என வெளிப்படையாகவே கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், தவெகவினரின் இந்த கருத்துக்கள் அக்கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது.

இதை உறுதிப்படுத்து விதமாக செய்தியாளர்களிடம் பேசியிருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர், புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய் தொடர்பாக அக்கட்சியினர் வெளியிடும் கருத்துகள் ரசிகர் மன்ற மனநிலையிலேயே இருப்பதாக தெரிவித்திருந்தார். தொடர்ந்து, கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார், ”ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக தவெக ஏற்றுக்கொள்ளாவிட்டால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களும் தவெக அரசில் அமைச்சர் பதவியில் நீடிக்க மாட்டார்கள்” எனக் குறிப்பிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எனினும், முதல்வர் விஜயோ அல்லது மூத்த நிர்வாகிகளோ இந்த விவாதங்கள் குறித்து விளக்கமளிக்காமல் இருந்து வருகின்றனர். இந்தச்சூழலில் தான், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜயை சந்தித்துப் பேசியிருக்கிறார். அவருடன் எம்.பி. பிரவீண் சக்ரவர்த்தியும் உடனிருந்தார். அடுத்த பிரதமர் வேட்பாளர் யார்? என்பது தொடர்ந்து விவாதப்பொருளாகி வரும் நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.