vijay makkal iyakkam
vijay makkal iyakkam pt web
தமிழ்நாடு

"அப்படி கூப்டாதீங்க” - விஜய் மக்கள் இயக்க மகளிரணி உறுப்பினர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் சொன்ன அட்வைஸ்!

Angeshwar G

நடிகர் விஜய் தலைமையில் விஜய் மக்கள் இயக்கம் செயல்பட்டு வருகிறது. இது விரைவில் அரசியல் கட்சியாக மாறலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் சில இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றனர். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு அணிகளும் கட்டமைக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், இன்று சென்னை அருகே பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவகலத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்க அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த ஆலோசனைக் கூட்டம் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.

விஜய் பயிலகம், சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கப் பரிசு என விஜய் மக்கள் இயக்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வழக்கறிஞர் அணி, ஐ.டி. அணி என தனித்தனியாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த சூழலில் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணியை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஈடுபட்டுள்ளனர். இயக்கத்தின் மாவட்ட மகளிர் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று காலை 11 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மகளிர் அணி நிர்வாகிகள் மத்தியில் பேசிய விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்:- மாதத்தில் ஒரு முறையாவது மகளிர் அணி நிர்வாகிகள் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட வேண்டும். முதுநிலை படிக்கும் கல்லூரி மாணவிகளை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.

தங்கள் பகுதியில் உள்ள பெண்கள் வாக்காளர்கள் விவரங்களை சேகரித்து வைத்திருக்க வேண்டும். தங்கள் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்கள் சாதித்தால், நேரடியாக சென்று வாழ்த்த வேண்டும். வழக்கறிஞராக இருக்கும் மகளிர் அணி நிர்வாகிகள், பகுதியைச் சேர்ந்த பெண்களுக்கு சட்ட ஆலோசனை தேவைப்பட்டால் வழங்க வேண்டும்.

உறுப்பினர்களை சேர்ப்பதற்காக, மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது விரைவில் அது பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்தார். மேலும் பேசிய அவர் கல்லூரி மாணவிகள் பலரும் ஆன்லைன், வாயிலாக மக்கள் இயக்கத்தில் சேர்க்க கோரிக்கை வைத்து வருகிறார்கள் அவர்களை கண்டுபிடித்து சேர்க்க வேண்டும் என தெரிவித்தார்.

விழாவில் பேசிய புஸ்ஸி ஆனந்த் அனைவருக்கும் உணவு தயாராகியுள்ளது. கண்டிப்பாக சாப்பிட்டுவிட்டுத் தான் செல்ல வேண்டும் என கூற அருகில் இருந்த பெண் ஒருவர் அவரைப் பார்ப்பதற்காகத்தான் வந்ததே என்றார். இதைக் கேட்டு தொடர்ந்து பேசிய புஸ்ஸி ஆனந்த், தளபதி ஊரில் இல்லை என்பதை கூறிதான் ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர்கள் அழைத்தார்கள்.

லியோ இடைவெளியீட்டு விழா இந்த மாதம் நடைபெற இருக்கிறது. யாரெல்லாம் இசைவெளியீட்டு விழாவிற்கு வரவேண்டும் என நினைக்கின்றீர்களோ மாவட்ட தலைவரிடம் தெரிவிக்கலாம். அப்போது தளபதியை நேரடியாக பார்க்கலாம். அடுத்த மாதம் 19 ஆம் தேதி லியோ மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும்” என்றார்.

”தளபதி என்றே அழையுங்கள்!” - புஸ்ஸி ஆனந்த்

இந்த கூட்டத்தில் பேசிய மகளிரணி நிர்வாகி ஒருவர், ”நான் விஜய்யின் மிகப்பெரிய ரசிகை” என்று சொல்ல உடனே புஸ்ஸி ஆனந்த் குறுக்கிட்டு, ”பேர் சொல்லி அழைக்க வேண்டாம். தலைவரை தளபதி என்றே அழைக்க வேண்டும்” என்று அட்வைஸ் செய்தார். அத்துடன் விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என பெண் நிர்வாகிகள் கேட்டதற்கு புஸ்ஸி ஆனந்த், ”அரசியலுக்கு வருவது குறித்து அவர்தான் அறிவிப்பார்” என்றும் தெரிவித்தார்.