தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தின் பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று, தமிழகம் வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பா.ஜ.க. மையக்குழு கூட்டம் இன்று, தமிழக பாஜக தலைமை அலுவலமான கமலாலயத்தில் தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் தலைமையில் நடைபெற்றது. இதில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், தேர்தல் கூட்டணி மற்றும் தேர்தலுக்கான அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், இக்கூட்டத்தில் "விஜய் இஸ் தி ஸ்பாய்லர்" என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. முன்னதாக, பாஜகவை பொறுத்த வரையில், அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தாலும் இந்த கூட்டணியில் விஜய் இணைய வேண்டும் என ஆரம்பத்திலிருந்து வலியுறுத்தி வந்தனர்.
ஆனால், விஜய் பாஜகவை கடுமையாக எதிர்த்து வரக்கூடிய நிலையில் அவர் நிச்சயமாக இணைய மாட்டார் என தற்போது நினைக்கும் பாஜக வாக்குகள் களையாமல் இருப்பதற்கான வியூகங்களை வகுக்க தொடங்கி இருக்கிறது. மேலும், இக்கூட்டத்தில், அ.தி.மு.க., பாஜக கூட்டணிக்குள் விஜய் இணைய வாய்ப்பில்லை என்று மற்ற பாஜக நிர்வாகிகள் தெரிவித்த நிலையில் அவருடைய வாக்குகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பாதிப்பு இல்லாத வகையில் பணியாற்ற வேண்டுமென தெரிவித்ததாகவும் கூறப்பட்டிருக்கிறது.