கருத்துக்கணிப்பு முகநூல்
தமிழ்நாடு

அடுத்த முதல்வருக்கான பந்தயம் | 2வது இடத்தில் விஜய்! CVoter கருத்து கணிப்பு சொல்வது என்ன? முழுவிபரம்

இந்த கருத்துக்கணிப்பு குறித்து அரசியல் வட்டாரங்கள் தெரிவிப்பது என்ன? பார்க்கலாம்.

திவ்யா தங்கராஜ்

தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யார் என CVoter நடத்திய கருத்துக்கணிப்பில் தவெக தலைவர் விஜய் இரண்டாம் இடம் பிடித்து இருப்பது, 2026 சட்டமன்ற தேர்தலில் அரசியல் களத்தில் பல்வேறு சவால்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலமைச்சர் பதவிக்கு மு.க. ஸ்டாலின் தான் மிகவும் விரும்பத்தக்க தேர்வாக உள்ளார் என்று சி.வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் 27 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த கருத்துக்கணிப்பில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது கவனத்தை பெற்றுள்ளது.

சம வாய்ப்பில் இபிஎஸ், அண்ணாமலை

தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற ரேஸில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி 10 சதவீத ஆதரவுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். அதே நேரத்தில் தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை 9 சதவீத ஆதரவைப் பெற்று நான்காவது இடத்தை பெற்றுள்ளார்.

கருத்துக்கணிப்பு முடிவுகள் ஸ்டாலினின் தலைமைக்கு மக்கள் மீண்டும் ஆதரவு தருவதாக உள்ளது. அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகியோரை பின்னுக்குத்தள்ளி விஜய் இரண்டாம் இடத்தில் இருப்பது பெரும் கவனத்தை பெற்றுள்ளது. அரசியல் களத்தில் விஜய் இன்னும் தேர்தல்களில் நேரடியாக போட்டியிடாத சூழ்நிலையில் இந்த முடிவுகள் வெளியாகியுள்ளது.

திமுக அரசின் செயல்பாடு எப்படி?

இந்த கணக்கெடுப்பில் தமிழக அரசின் செயல்பாடுகளில் பொதுமக்களின் திருப்தியையும் கருத்தில்கொண்டு எடுக்கப்பட்டது.  இந்த ஆய்வு முடிவுகளின்படி, பதிலளித்தவர்களில் 15 சதவீதம் பேர் தமிழக அரசின் செயல்பாட்டில் "மிகவும் திருப்தி அடைவதாக" கூறியுள்ளனர். அதே நேரத்தில் 36 சதவீதம் பேர் "ஓரளவுக்கு திருப்தி அடைவதாக" தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். 25 சதவீதம் பேர் அரசின் செயல்பாடுகளில் "எந்த விதத்திலும் திருப்தி அடையவில்லை" என்றும், 24 சதவீதம் பேர் தங்களுக்கு கருத்துக்கணிப்பு தொடர்பாக எந்த கருத்துக்களும் கூறாமல் இருந்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் செயல்பாடு எப்படி?

அதே போல முதலமைச்சர் ஸ்டாலினின் தனிப்பட்ட செயல்பாடு குறித்து பதிலளித்தவர்களில் 22 சதவீதம் பேர் மிகவும் திருப்தி அடைவதாக தெரிவித்துள்ளனர். 33 சதவீதம் பேர் ஓரளவுக்கு திருப்தி என்றும் தெரிவித்தனர். 22 சதவீதம் பேர் முதலமைச்சர் ஸ்டாலினின் தனிப்பட்ட செயல்பாடு எந்த விதத்திலும் திருப்தி அளிக்கவில்லை  என கூறியுள்ளனர். 23 சதவீதம் பேர் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

எடப்பாடி பழனிசாமி

எதிர்க்கட்சி தலைவராக இபிஎஸ் செயல்பாடு எப்படி?

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடு குறித்த பொதுமக்களின் கருத்தையும் இந்த ஆய்வு பிரதிபலித்து  இருக்கிறது. பதிலளித்தவர்களில் 8 % பேர் மட்டுமே மிகவும் திருப்தி அடைந்துள்ளதாக குறிப்பிட்டு இருகின்றனர். அதே நேரத்தில் 27 % பேர் ஓரளவுக்கு திருப்தி அடைந்துள்ளதாகவும் கூறுகின்றனர். 32 % மக்கள் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடு எந்த விதத்திலும் திருப்தி அளிக்கவில்லை  என்றும், 33% பேர் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் கூறி இருக்கின்றனர்.

கவலையில் பெண்கள் பாதுகாப்பு

இந்த கருத்துக்கணிப்பில் மக்கள் தங்கள் வாக்குகளைப் பாதிக்கும் மிக முக்கியமான பிரச்னைகள் குறித்து கேட்டபோது, பதிலளித்தவர்கள் பெண்களின் பாதுகாப்பை 15 % பேர் முக்கிய கவலையாகக் குறிப்பிட்டனர். அதைத் தொடர்ந்து 12% பேர் விலைவாசி உயர்வு, 10% வாக்காளர்கள் போதைப்பொருள் மற்றும் மது பயன்பாடு போன்றவற்றை முக்கிய பிரச்சினையாக அடையாளம் கண்டுள்ளனர். அதே நேரத்தில் வேலையின்மை பிரச்னையை 8 சதவீதம் பேர் மேற்கோள் காட்டினர்.

சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்திறன் குறித்த பொதுமக்களின் கருத்தும் கேட்கப்பட்டது. பதிலளித்தவர்களில் 16 சதவீதம் பேர் தங்கள் எம்.எல்.ஏ.க்கள் மீது மிகவும் திருப்தி அடைவதாக கூறியிருந்தாலும், 32 % பேர் ஓரளவுக்கு திருப்தி அடைவதாக தெரிவித்தனர். இதற்கிடையில், 25 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்தனர். 27 சதவீதம் பேர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி தமிழக அரசியலில் ஸ்டாலின் ஆதிக்கம் செலுத்தும் தலைவராக இருந்தாலும், போட்டியாளராக விஜய் எதிர்பாராத விதமாக உயர்ந்திருப்பதும் 2026 சட்டமன்றத் தேர்தலில் என்ன மாற்றங்கள் நிகழும் என்ற எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறது. நேற்று தவெக கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் 2026தேர்தலை குறிப்பிட்டு திமுக மற்றும் தவெகவிற்கு தான் தேர்தல் அரசியலில் போட்டி என பேசியதும் கவனிக்கத்தக்கது.

இந்த கருத்துக்கணிப்பு குறித்து அரசியல் வட்டாரங்கள் தெரிவிப்பது என்ன? கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோ பதிவுகளில் பார்க்கலாம்.

” விஜயின் பேச்சுக்கு இன்னும் வலுசேர்க்கிறது!" - ப்ரியன்

"இந்த கருத்துக்கணிப்பில் எனக்கு பல சந்தேகம் உள்ளது" - போட்டுடைத்த கான்ஸ்டன்டைன்

"இது விஜய்க்கு ஒரு பிம்பத்தை கட்டமைக்கிற முயற்சி!" - அடித்து சொன்ன துக்ளக் ரமேஷ்

” இதைப்பற்றி அதிமுக கவலைப்படாது " - தெளிவாக சொன்ன பொங்கலூர் மணிகண்டன்!