தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரந்தூரில் விமான நிலையத்திற்கு எதிராக போராடும் மக்களைச் சந்தித்து, மக்களது போராட்டத்திற்கு உடன்நிற்பதாக தெரிவித்தார். மக்கள் மத்தியில் பேசிய அவர், “இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் நம் விவசாயிகளை பாதிக்கும் இத்திட்டத்திற்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தவும் தயங்கமாட்டோம் என சொல்லியிருந்தோம். அதை இங்கு மீண்டும் வலியுறுத்துகிறேன். இந்த பிரச்னையில் நான் உங்களுடன் உறுதியாக நிப்பேன்.
விமான நிலையத்திற்காக நீங்கள் ஆய்வு செய்த இடத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என ஒன்றிய அரசையும் மாநில அரசையும் கேட்டுக்கொள்கிறேன். விவசாய நிலங்கள் இல்லாத, பாதிப்புகள் குறைவாக இருக்கிற இடமாக பார்த்து உங்கள் விமான நிலையத்தை கொண்டு வாருங்கள்” எனத் தெரிவித்தார்.
திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்த விஜய், “அரிட்டாபட்டியில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டு வந்தார்கள். அதை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஆனால், அதே நிலைப்பாட்டைத்தானே இங்கு பரந்தூர் பிரச்னையிலும் எடுத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லையே. இந்த விமான நிலைய திட்டத்தையும் தாண்டி இத்திட்டத்தில் அவர்களுக்கு ஏதோ லாபம் இருக்கிறது. அதை நம் மக்கள் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.
நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது, 8 வழிச்சாலையை எதிர்த்தீர்கள், காட்டுப்பள்ளி துறைமுகத்தை எதிர்த்தீர்கள். அதே நிலைப்பாட்டைத்தானே இங்கேயும் எடுக்க வேண்டும். எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு, ஆளும் கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு எதிர்ப்பா? உங்கள் நாடகத்தை எல்லாம் பார்த்துக்கொண்டு மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய பத்திரிக்கையாளர் அய்யநாதன், “இதில் அரசியல்ரீதியாக விஜய்க்கு என்ன பலன் என்பதெல்லாம் கிடையாது. அரசியலே மக்களுக்காகத்தான். உங்கள் செய்தியாளர்களே அங்கு சென்று பார்த்திருக்கிறார்கள், ரிப்போட் செய்திருக்கிறார்கள். ஏரி நீர்நிலைகள் எல்லாம் நிரம்பி இருக்கும்போது அரசு எந்த முன்னெடுப்புகளையும் எடுக்கவில்லை. கோடைகாலத்தில் ட்ரோன் காட்சிகளை எடுத்தனர்.
அங்கிருக்கும் மக்கள் அதிகம் சொல்வது, நாங்கள் எங்கு செல்வோம், எங்களுக்கு என்ன தெரியும், நாங்கள் எப்படி வாழ்வது என்றுதான் சொல்கிறார்கள். நாங்கள் தற்போது மிக வசதியாக இந்த கால்நடைகளை, நீர்நிலைகளை நம்பி வாழ்ந்து வருகிறோம் என்று சொல்கிறார்கள். நகரத்தில் இருப்பவர்கள் ‘விமான நிலையம் அவசியம், பொருளாதார வளர்ச்சிக்கு அது அவசியம்’ என்பார்கள். ஆனால், அது அழிப்பது 13 கிராமங்களை. விமான நிலையத்திற்கான திட்டச்செலவாக 32 ஆயிரம் கோடி சொல்கிறீர்கள். இத்தனை கோடிகளை செலவு செய்து இம்மாதிரி வளமான கிராமங்களை உருவாக்க முடியுமா?
இந்த நாட்டில் எப்போதெல்லாம் பூர்வீகக்குடிகளையும், விவசாயிகளையும், பழங்குடிகளையும் அந்த இடத்தில் இருந்து துரத்தும்போதெல்லாம் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களை எல்லாம் வளர்ச்சிக்கு எதிராவனவர்கள் என்றுதான் ஒன்றிய அரசும் மாநில அரசும் குற்றம்சாட்டுகிறது” எனத் தெரிவித்தார்.