பிகில் பட வெற்றியை கொண்டாடுவதற்காக பள்ளி மாணவிகளுக்கு விஜய் ரசிகர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
மதுரை மாவட்டம் மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திரைப்பட நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்படம் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் சார்பில் படிப்பு மற்றும் விளையாட்டுகளில் சிறந்த மாணவிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது. மேலும் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களையும் ரசிகர்கள் பள்ளிக்கு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், நடிகர் கஞ்சா கருப்பு கலந்து கொண்டு மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின்போது, விஜய் ரசிகர்கள் சார்பில், பிகில் திரைப்பட ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் மாணவிகளுக்கு நடிகரின் புகைப்படம் அடங்கிய ஸ்டிக்கர் வழங்கப்பட்டது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரி மீனாவதியிடம் கேட்டபோது, "இந்த நிகழ்ச்சி குறித்து எந்தவித தகவலும் எனது கவனத்திற்கு வரவில்லை, இது குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.