விஜய் pt
தமிழ்நாடு

‘தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும் கூட்டு சேர நினைச்சாங்க..’ திருச்சியில் விஜய் பேசிய முழு விவரம்!

தன்னுடைய அரசியல் பரப்புரையை திருச்சியிலிருந்து தொடங்கிய விஜய், முதல்வராக மாறிய பிறகு தனது முதல் நன்றி உரையையும் திருச்சியிலேயே நடத்தினார்.

Rishan Vengai

திருச்சி கிழக்கு, பெரம்பூர் இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்று முதல்வரான விஜய், திருச்சியில் நன்றி நிகழ்ச்சியில் உரையாற்றி, திமுக மற்றும் ‘தீர்ந்துபோன சக்தி’ கூட்டணியை கடுமையாக விமர்சித்தார். தன்னை தடுக்க முயன்றவர்கள் மக்கள் மனதை தவறாக மதித்ததாக கூறி, திமுக-தவெக போட்டிதான் தமிழ்நாட்டின் அரசியல் நிஜம் என வலியுறுத்தினார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டிருந்த விஜய், பெரம்பூரில் 1,20,365 வாக்குகளும் திருச்சி கிழக்கில் 91,381 வாக்குகளும் பெற்று இரண்டிலும் வென்று சாதித்தார். இந்தசூழலில் தான் முதல்வராக பதவியேற்ற விஜய், பெரம்பூர் தொகுதியை தக்க வைத்துக் கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார்.

CM Vijay

திராவிட கட்சிகளுக்கு திருப்புமுனை மாவட்டமாக திருச்சி பார்க்கப்பட்டு வரும் நிலையில், திருச்சி கிழக்கு உட்பட மொத்தமுள்ள 9 தொகுதிகளில் 6-ல் தவெக இம்முறை வெற்றிவாகை சூடியது. இந்தசூழலில் தான், திருச்சி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கான நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் இன்று கலந்துகொண்டு உரையாற்றினார். முதல்வராக பதவியேற்றப்பின் முதல்வர் விஜயின் முதல் திருச்சி பயணம் இதுவாகும்.

விஜயின் முழு உரை..

திருச்சியில் மக்களுக்கு இடையே பேசிய முதல்வர் விஜய், “என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கு எனது வணக்கமும் நன்றியும். தேர்தல் ஆணைய விதிகளின்படிதான் நான் பெரம்பூர் எம்எல்ஏ, ஆனால் எனக்கு திருச்சி கிழக்கு மக்களும் நெருக்கம் தான். சொல்லப்போனா திருச்சி தான் எனக்கு செல்லபிள்ளை.

ஆட்சிக்கு வந்து சில வாரங்கள் கூட ஆகல, 6 மாதங்கள் அமைதியா இருப்போம் என்று சொன்னவர்கள் எல்லாம் 6 நாட்கள் கூட அமைதியா இருக்க முடியல. ஆட்சிக்கு வந்த அரைமணி நேரத்தில் ஆரம்பிச்சிட்டாங்க கல்யாண வீட்டில் எல்லாம் புலம்பிக்கிட்டு இருக்காங்க. இப்போதும் சொல்கிறேன் திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையேதான் போட்டியே. இருவருக்கும் இடையில்தான் போட்டியே தமிழ்நாட்டில் வேறு யாருக்கும் இடமில்லை.

முன்பு ரீல்ஸ் பார்த்தவர்கள் எல்லாம் இப்போது நியூஸ் பார்க்கிறார்கள், சட்டமன்றத்தில் நடப்பதை இப்போது அனைவரும் பார்க்கும் நிலையை உண்டாக்கியுள்ளோம். தற்குறி, தற்குறி என்றவர்கள்தான் உங்கள் வாழ்க்கையை இப்போது கேள்விக்குறியாக்கி உள்ளனர். நீங்கள் மக்களை தப்பாக பேசினால், இந்த விஜய் கேள்வி கேட்பான், சும்மா இருக்க மாட்டான்.

விஜய்

எங்களை பற்றி நீங்கள் பேசிக் கொண்டே இருங்கள், நாங்கள் மக்களுக்கு நல்லது செய்து கொண்டே இருப்போம். எல்லாவற்றிலும் பிளாக் அண்ட் ஒயிட் ஆக இருப்பான் என்பதே எனது கோட்டின் அடையாளம். ஏன் நம்மலாம் கோட் சூட்லா போடக் கூடாதா? அதிகாரம் பண்றவங்களும், ஆதிக்கம் செலுத்துறவங்க தான் கோட் சூட் போடணுமா? அப்படிலா எதுவுமே கிடையாது. நான் என்ன கலர் கலராவா போட்டுட்டு வர்றேன்.. ரெண்டே ரெண்டு கலர்தான். பிளாக் & வொயிட். எல்லாத்துலயும் இந்த விஜய் பிளாக் அண்ட் வொயிட் ஆக இருப்பான் என்பதை காட்டத்தான் இந்த கலர். அந்த பிளாக் கூட யாரை குறிக்கும் எதை குறிக்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

தீய சக்தியும் தீர்ந்துபோன கட்சியும்..

திமுகவும் மற்றும் பலரும் ஒன்றாக சேர்ந்துக்கிட்டு விஜயோட ஆட்சி வந்திட கூடாதுனு கடைசி 5 நாளும் ஒரு கூத்து பண்ணாங்க; இப்படியெல்லாம் கூட நடக்குமோ என்று இருந்தது. நீங்க எப்போ தீந்துபோன சக்தியோடு கூட்டு சேர்ந்துகிட்டு ஆட்சி அமைக்க நினைச்சிங்களோ அப்பவே இந்த திமுக தூர்ந்துபோன சக்தியாக மாறிடிச்சு. நீங்களலாம் நம்மல பத்தி அவதூறு பேசலாமா?

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று திமுகவும் மற்றும் பலரும் தினமும் அறிக்கைவிடுகின்றனர். தமிழ்நாடு முழுவதும் போதைக்கலாச்சாரம் பரவிக் கிடக்கிறது. அதை தொடக்கத்திலேயே நீங்கள் தடுக்கவில்லை. இப்போது பழியை தூக்கி என்மேல் போடுறீங்க.

விஜய்

எம்.ஜி.ஆரின் முதல் தேர்தலில் கூட இந்த அளவுக்கு வாக்கு சதவீதம் வாங்கவில்லை என்று நிறைய பேர் சொன்னார்கள். தவெகவிற்கு அவ்வளவு ஆதரவு கொடுத்துள்ளீர்கள். எம்ஜிஆருடன் என்னை Compare பண்ண வில்லை... எம்.ஜி.ஆர்.. எம்.ஜி.ஆர்தான். ஆனால், நாம பெரியார், அண்ணா, எம்ஜிஆர் வழியில் அன்பாக உழைக்க வந்த உங்க விஜய் அவ்வளவுதான்.

தேர்தலில் இன்னும் கொஞ்சம் அதிகமாக ஆதரித்து இருந்தா கொஞ்சம் நல்லா இருந்திருக்கும். பரவால்ல எதிர்காலத்துல வரப்போற எல்லா தேர்தல்களிலும் உங்களுடைய முழு ஆதரவை என்னால் வாங்க முடியும் என்ற நம்பிக்கை என் மனதில் ஆழமாக பதிந்து இருக்கு.

ஓட்டுபோட்டா தற்குறியா..?

உங்களுக்காக உண்மையா உழைக்க வந்த இந்த விஜயா? விஜயோட ஆட்சி அமைந்திட கூடாதுனு தடுக்க நினைச்ச ஸ்டாலின் சாரா? அவ்ளோ தான். இதுக்கு நடுவுல வேற யாராவது எந்த அல்லு சில்லாவது நம்மை வந்து தடுக்கவோ, எதிர்க்கவோ பண்ணாங்கனா நிர்வாகம் அதுக்கு பொறுப்பில்ல ராஜா.. ரிசல்ட் என்னவா வரும்னு அது உங்களுக்கே தெரியும்.

நம்மல ஏளமாக பேசுறதா நினைச்சு அவங்களுக்கு அவங்களே ஆப்பு வச்சுக்கிறாங்க. திமுக நம்மல தடுக்க தடுக்க, திமுக நம்மல எதிர்க்க எதிர்க்க திமுக நம்மல அவமானப்படுத்த அத்தனையும் நமக்கு நன்மையே. எங்களுக்கு ஓட்டு போட்டா கெட்டவங்க, தற்குறியா?.

விஜய்

உண்மையிலே நீங்க மக்கள் மனச புரிஞ்சு வச்சிருந்தீங்கனா மக்களை இப்படி தப்பா பேசியிருக்கமாட்டீங்க. அரசியல் புரிதல் இல்லாம, கவர்ச்சியில் மயங்கி மக்கள் நமக்கு வாக்களித்துவிட்டார்கள் என்று சொல்றாங்க. அவங்களுக்கு ஓட்டு போட்டப்ப நல்லவர்களாம், அதே மக்கள் நமக்கு ஓட்டு போட்டா கெட்டவங்களாம், தற்குறியாம். இதே மக்கள் தானே இத்தனை வருஷமா உங்களுக்கு ஓட்டு போட்டுக்கிட்டு இருந்தாங்க. உங்களுக்கு மட்டும் வேற ஏதாச்சும் பிளானட்டில் இருந்து வந்து ஓட்டு போட்டாங்களா?

மக்கள் ரொம்ப தெளிவாகிட்டாங்க. நமக்கும் மக்களுக்கும் இடையே இருக்கிற பூர்வ ஜென்ம பந்தத்தை, அந்த உறவை சதிகள், சூழ்ச்சிகள் பண்ணி யாராலையும் கெடுக்கவே முடியாது.

கெடுக்க முயற்சி பண்ணீங்க, அது நான் ஆட்சிக்குலாம் வரதுக்கு முன்னாடி. நான் ஆட்சிக்கு வரக்கூடாதுனு என்னவெல்லாம் பண்ணீங்க. ரொம்ப பழைய டெக்னிக் எல்லாம் பயன்படுத்தி நம்மளையும் மக்களையும் பிரிச்சிடலாம்னு நெனச்சா ஒருக்காலும் நடக்காது. மக்கள் எல்லாம் ரொம்ப தெளிவாகிவிட்டார்கள்.. ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியா செயல்பட்டு மக்கள் மனசை வெல்ல பாருங்க” என பேசினார்.