கரூர் துயரம் குறித்து தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் இன்று மாலை கரூரில் பரப்புரையில் ஈடுபட்ட நிலையில், அவரைக் காண்பதற்காக ஆரம்பம் முதலே தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலருக்கும் மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு அதில் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து பரப்புரை முடிந்து கூட்டம் கலைந்த நிலையில் மேலும் பலர் மயக்கமடைந்தனர். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பல பேரில், 8 குழந்தைகள், 17 பெண்கள், 11 ஆண்கள் என 36 பேர் உயிரிழந்திருப்பதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. இது மேலும் உயரக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கப்படும் நிலையில், தமிழக அரசு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், திருச்சியில் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் கூறாமல் சென்ற தவெக தலைவர் விஜய், கரூர் துயரம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “இதயம் நொறுங்கி போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர, சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்”எனப் பதிவிட்டுள்ளார்.