தமிழ்நாடு அரசியல் பெரும்பாலும் திமுக, அதிமுக என இரு துருவ அரசியலாகவே இருந்த நிலையில், தற்போது விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை அரசியல் போக்கையே மாற்றியமைத்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது. இதனிடையே ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தவெக தலைவர் விஜய் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார். இதில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் விஜய் நேரடியாக களம் காண்கிறார். இதற்கான வேட்புமனு தாக்கலையும் செய்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் தவெக தலைவர் விஜய், திருச்சி கிழக்கு, பெரம்பூர், கொளத்தூர், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் பரப்புரையில் ஈடுபட்டிருக்கிறார். இந்த சூழலில் தான், இன்று தி.நகர், வில்லிவாக்கம், அண்ணாநகர் மற்றும் விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகளில் விஜய் பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. எனினும், வில்லிவாக்கம் மற்றும் தி.நகரில் மட்டுமே பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதியளித்திருந்தது.
மேலும், வில்லிவாக்கத்தில் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை மற்றும் தி.நகரில் 2 மணி முதல் 3 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக, தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ஒரு மணி நேரத்திற்குள் வில்லிவாக்கத்தில் இருந்து தி.நகருக்கு வர முடியாது. அதனால், மாற்று நேரத்தை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தபோதும் காவல்துறையினர் அதை ஏற்க மறுத்ததாகவும், அதேபோல், வில்லிவாக்கத்தில் இருந்து வரும் போது அண்ணா ஆர்ச் வழியாக வரக்கூடாது என்றும், வாகனத்தில் இருக்கக்கூடிய ஒலிபெருக்கியில் மட்டும் தான் பேச வேண்டும் எனவும் பல்வேறு நிபந்தனைகள் மிகவும் கட்டுப்பாடுகளுடன் விதிக்கப்பட்டதால் இந்த பிரச்சாரத்தை விஜய் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது